கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரானகால் இறுதி ஆட்டத்தின் 2-வதுநாளில் தமிழக அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள்குவித்து முன்னிலை பெற்றது.
கோவையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணியானது 77.1 ஓவரில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹர்விக் தேசாய் 83 ரன்கள் எடுத்தார். தமிழக அணி தரப்பில் சாய்கிஷோர் 5, அஜித் ராம் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய தமிழக அணி முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்தது. நாராயண் ஜெகதீசன் 12, சாய் கிஷோர் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தமிழக அணி தொடர்ந்து விளையாடியது. ஜெகதீசன் 37 ரன்களில் பார்த் புட் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்கிய பிரதோஷ் ரஞ்ஜன் பால் 13 ரன்களில் பார்த் புட் பந்தில்போல்டானார். 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய பாபா இந்திரஜித், சாய் கிஷோருடன் இணைந்து சீராக ரன்கள் சேர்த்தார். சாய் கிஷோர் 144 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்கள்எடுத்த நிலையில் ஜெயதேவ் உனத்கட் பந்தில் வெளியேறினார்.
இதன் பின்னர் களமிறங்கிய பூபதி குமாரும் சீராக ரன்கள் சேர்த்தார். அபாரமாக விளையாடிய பாபா இந்திரஜித் 139 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்த நிலையில் தர்மேந்திரசிங் ஜடேஜா பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து பூபதி குமார்134 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் யுவராஜ்சிங் தோடியா பந்தில்போல்டானார். 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் தமிழக அணி 100 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. விஜய் சங்கர் 14, முகமது அலி 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 117 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தமிழக அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.