தெஹ்ரான்: 11-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்றது. இதில் ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் பந்தய தூரத்தை 8 நிமிடம் 07.48 வினாடிகளில் அடைந்து தங்கப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் சிறிது நேரத்தில் குல்வீர் சிங் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர், தடகள ஓடுபாதையில் தனக்கான இடத்தில் இருந்து விலகிச்சென்று ஓடியது தெரியவந்ததை தொடர்ந்து போட்டி அமைப்பாளர்கள் குல்வீர் சிங்கை தகுதி நீக்கம் செய்தனர்.
இதை எதிர்த்து நள்ளிரவில் இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் குல்வீர் சிங் தடகள ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாக கூறி இந்திய தடகள கூட்டமைப்பின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தனர்.
இதனால் 2-வது இடம் பிடித்திருந்த கிர்கிஸ்தானின் நுர்சுல்தானுக்கு (8:08.85) தங்கப் பதக்கமும், 3-வது இடம் பிடித்திருந்த ஈரானின் ஜலில் நசேரிக்கு வெள்ளிப் பதக்கமும் (8:09.39) வழங்கப்பட்டது. கஜகஸ்தானின் ஃப்ரோலோவ்ஸ்கி (8:17.17) வெண்கலப் பதக்கம் பெற்றார்.