இஸ்லாமாபாத்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் உலக குரூப் 1 'பிளே ஆப் சுற்றில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, பாகிஸ்தானுடன் இன்று இஸ்லாமாபாத் நகரில்மோதுகிறது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானில் விளையாட உள்ளதால் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடைசியாக 1964-ல் பாகிஸ்தான் சென்ற இந்திய டென்னிஸ் அணி, அப்போது 4-0 என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்திருந்தது.
தற்போதைய இந்திய அணியில் ராம்குமாா் ராமநாதன், ஸ்ரீராம் பாலாஜி, நிக்கி பூனச்சா, யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். டேவிஸ் கோப்பை வரலாற்றில் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில் இந்திய அணிதோல்வி அடைந்தது இல்லை.அந்த அணிக்கு எதிராக விளையாடிய 7 மோதல்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது. இம்முறையும் இது தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணியில் அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர்களான ஐசம்-உல்-ஹக் குரேஷிமற்றும் அகில் கான் உள்ளனர்.இவர்கள் புல்தரை போட்டிகளில்சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் என்பதால் இந்திய அணி வீரர்களுக்கு சவால்தரக்கூடும் எனகருதப்படுகிறது. இஸ்லாமாபாத்தில் உள்ள புல்தரை ஆடுகளத்தில் பந்துகள் தாழ்வாகவே வரும். அதேவேளையில் வேகம் அதிகமாக இருக்கும்.
இதனால் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ராம்குமார் ராமநாதனுடன் என.ஸ்ரீராம் பாலாஜி களமிறங்குகிறார். ஸ்ரீராம் பாலாஜி இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடி வரக்கூடியவர். அணியில் உள்ள மற்றொரு வீரரானநிக்கி பூனச்சா, ஸ்ரீராம் பாலாஜியைவிட அதிக உயரம் கொண்டவர். இஸ்லாமாபாத் ஆடுகளத்தில் பந்துகள் தாழ்வாக வரும் என்பதால் உயரமான வீரர் பந்தை எதிர்கொள்வதில் தடுமாற வேண்டிய நிலை ஏற்படக்கூடும். இதன் காரணமாகவே ஸ்ரீராம் பாலாஜியை ஒற்றையர் பிரிவில் இந்திய அணி களமிறக்குகிறது. இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி,சாகேத் மைனேனி ஜோடி களமிறங்குகிறது. இந்த ஜோடி நாளை (4-ம் தேதி) நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தானின் பர்கத்துல்லா, முஸம்மில் முர்டசா ஜோடியை சந்திக்கிறது.
தொடக்க நாளான இன்று நடைபெறும் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் ராம்குமார் ராமநாதன் - ஐசம் உல் ஹக் குரேஷி, ஸ்ரீராம் பாலாஜி - அகில் கான்மோதுகின்றனர். பாதுகாப்பு காரணங்களை கருதி இந்த போட்டிகளை நேரில் காண்பதற்கு 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது சர்வேதச டென்னிஸ் கூட்டமைப்பு.