இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 2014-ம் ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ள நிலையில், தோனிக்கு இது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.
லண்டனில் நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. வங்கதேசத்தில் இருப்பதால் தோனியால் இந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை. தோனி அனுப்பியிருந்த செய்தி, விழாவில் வாசிக்கப்பட்டது. அதில், இந்த விருதை ஆசியாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள தனது ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பதாக தோனி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனான தோனி, ஒருநாள் கிரிக்கெட், இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இக்கட்டான சூழ்நிலையிலும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் திறனுடையவர்.
ஐசிசி நடத்தும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை, 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு உரியவர். எனவே அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனி 16-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.