கோவை: தமிழ்நாடு - ரயில்வேஸ் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி கோவையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், தமிழ்நாடு அணியின் வீரர் ஜெகதீசன் சதம் விளாசினார்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேற்று தொடங்கின. தமிழ்நாடு அணி மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு அணியில் விமல் குமார், ஜெகதீசன், சச்சின், பாபா இந்திரஜித், விஜய் சங்கர், பூபதி குமார், முகமது அலி, ரவி னிவாசன், சாய்கிஷோர், சந்தீப் வாரியர், முகமது, அஜித்ராம் ஆகியோரும், ரயில்வேஸ் அணியில் சிவம் சவுத்திரி, விவேக் சிங், பிரதாப் சிங், நிஷாந்த் குஷ்வாலா, முகமது சயிப், உபேந்திரா யாதவ், சகாப் யுவராஜ், யுவராஜ் சிங், ஆகாஷ் பாண்டே, கரண் சர்மா, குணால் யாதவ் ஆகியோரும் இடம் பிடித்தனர்.
தமிழ்நாடு அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக விமல் குமார், ஜெகதீசன் களமிறங்கினர். விமல் குமார் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த சச்சின் 33 ரன், பாபா இந்திரஜித் 18, விஜய் சங்கர் 4, பூபதி குமார் 67 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரராக களமிறங்கிய ஜெகதீசன் சதம் விளாசினார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில், தமிழ்நாடு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்திருந்தது. ஜெகதீசன் 155 ரன், முகமது அலி 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
ரயில்வேஸ் அணியின் ஆகாஷ் பாண்டே 2 விக்கெட் வீழ்த்தினார். யுவராஜ்சிங், கரண் சர்மா, முகமது சயிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது.