விளையாட்டு

பிரிஸ்பன் சர்வதேச டென்னிஸ் போட்டி: வெற்றியுடன் தொடங்கினார் ரபேல் நடால்

செய்திப்பிரிவு

பிரிஸ்பன்: பிரிஸ்பன் சர்வதேச டென்னிஸ் தொடரை ஸ்பெயினின் ரபேல் நடால் வெற்றியுடன் தொடங்கினார். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் பிரிஸ்பன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ரபேல் நடால், தரவரிசையில் 3-வது இடத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியமுடன் மோதினார். ஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 7-5, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

37 வயதான ரபேல் நடால் கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் 2-வது சுற்றில் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதன் பின்னர் எந்தவித போட்டிகளிலும் களமிறங்காத அவர்,தற்போது பிரிஸ்பன் போட்டியில் களமிறங்கி புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கி உள்ளார்.

தரவரிசையில் 672-வது இடத்தில் உள்ள ரபேல் நடால்,பிரிஸ்பன் தொடரில் வைல்டு கார்டு மூலம் பங்கேற்று விளையாடி வருகிறார். அவர், தனது 2-வது சுற்றில் 102-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ஜேசன் குப்லருடன் மோதுகிறார்.

SCROLL FOR NEXT