ஆஸ்திரேலியாவின் கடந்த தென் ஆப்பிரிக்கத் தொடரின் போது மோர்னி மோர்கெல் வீசிய அபாயகரமான பவுன்சர் கேப்டன் மைக்கேல் கிளார்க் தோள்பட்டையை கிழித்தது.
இது நடந்து 5 மாதங்களுக்குள்ளாக தற்போது ஜிம்பாவேயில் தென் ஆப்பிரிக்கா பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் மீண்டும் மோர்னி மோர்கெலின் பவுன்சர்களை எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார் மைக்கேல் கிளார்க்.
“எனது கிரிக்கெட் வாழ்வில் நிறைய பவுன்சர்களை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் மோர்னி மோர்கெல் ஒரே ஸ்பெல்லில் தொடர்ச்சியாக என்னை நோக்கி பவுன்சர்களை வீசினார்.
ஆனால் நான் அதற்கும் தயாராகவே இருக்கிறேன், இந்த ஓய்வு நாளில் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டுள்ளேன். நான் எனது உடலை ஆரோக்கியமாக உணர்கிறேன், நிறைய பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டேன்” என்றார் கிளார்க்.
கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் மோர்னி மோர்கெல் பவுன்சரில் அவரது தோள்பட்டையில் கடும் காயம் ஏற்பட மைதானத்தில் சிகிச்சை முடிந்த பிறகே கிளார்க் இன்னிங்சைத் தொடர முடிந்தது.
மேலும் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி வரும் வரை தோள்பட்டையில் கடும் வலி இருந்ததால் எடுக்கப்பட்ட ஸ்கேனில் எலும்பில் லேசான கீறல் தெரிந்தது. இதனால் ஆஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் அவரால் விளையாட முடியாமல் போனது.
இந்த முத்தரப்பு தொடரிலும் தென் ஆப்பிரிக்கா தன் மீது பவுன்சர்களை நிச்சயம் வீசும், அந்தச் சவால்களுக்கு எப்பவும் தயாராகவே இருக்கிறேன் என்கிறார் தன்னம்பிக்கைக்குப் பெயர் பெற்ற மைக்கேல் கிளார்க்.