தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உட்பட 15 பேருக்கு அர்ஜுனா விருது வழங்க தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விருதுக்கு தகுதியானவர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
விளையாட்டுத் துறையில் மிகவும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுக்கு யாரும் பரிந்துரைக்கப்படவில்லை. அர்ஜுனா விருதுக்கு 15 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அவர்கள் விவரம் வருமாறு:
ரவிச்சந்திரன் அஸ்வின் (கிரிக்கெட்), அகிலேஷ் வர்மா (வில்வித்தை), டிண்டு லூகா (தடகளம்), எச்.என்.கிரிஷா (பாராஒலிம்பிக்ஸ்), வி.டிஜு (பாட்மின்டன்), கீது ஆன் ஜோஸ் (கைப்பந்து), ஜெய் பகவான் (குத்துச் சண்டை), அனிர்பான் லஹரி (கோல்ப்), மம்தா புஜாரி (கபடி), சாஜி தாமஸ் (படகுப் போட்டி), ஹீனா சித்து (துப்பாக்கிச் சுடுதல்), அனகா அலங்காமோனி (ஸ்குவாஷ்), டாம் ஜோசப் (கைப்பந்து), ரேணுபால் சானு (பளு தூக்குதல்), சுனில் ராணா (மல்யுத்தம்).
தேர்வுக் குழுவில் விளையாட்டுத் துறை சார்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ், குஞ்சராணி தேவி, இரண்டு செய்தியாளர்கள், அரசுத் தரப்பில் இந்திய விளையாட்டு ஆணைய இயக்குநர் ஜெனரல் ஜிஜி தாம்சன் உட்பட 3 பேர் இடம்பெற்றி ருந்தனர்.