விளையாட்டு

ஆசிய ஹாக்கி: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

செய்திப்பிரிவு

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஹாக்கி பிரிவில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை தென் கொரியாவின் இன்சியோன் நகரில் நடைபெறவுள்ளது. இதில் ஹாக்கிப் போட்டியில் இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. அதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எனினும் போட்டி நடைபெறும் தேதி குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. அது விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பி பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஓமன், இலங்கை ஆகிய அணிகளும், ஏ பிரிவில் மலேசியா, தென் கொரியா, ஜப்பான், வங்கதேசம், சிங்கப்பூர் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. மகளிர் பிரிவில் இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அதே பிரிவில் நடப்பு சாம்பியன் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் தென் கொரியா, ஜப்பான், கஜகஸ்தான், ஹாங்காங் சீனா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் போட்டியின் இரு பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள் 2016-ல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க நேரடித் தகுதி பெறும்.

SCROLL FOR NEXT