விளையாட்டு

“பாட் கம்மின்ஸ் ஒன்றும் பெரிய டி20 வீரர் இல்லை” - முன்னாள் ஆஸி. பவுலர் கருத்து

ஆர்.முத்துக்குமார்

ரூ.20.50 கோடி தொகைக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸை ஐபிஎல் அணியான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அன்று ஏலம் எடுத்தது பரவலான கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது ஒருபுறம் என்ற நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஒரு விதத்தில் பாட் கம்மின்ஸின் பந்துவீச்சும் இவரைத்தான் அடியொட்டியது என்று ஜேசன் கில்லஸ்பி தன் விமர்சனக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதாவது டெஸ்ட் வடிவத்தில் சிறந்த கேப்டன், ஒருநாள் கிரிக்கெட்டிலும் கூட என்று சொல்லலாம். ஆனால், டி20 வடிவத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கு அவரை ஏலம் எடுத்திருப்பது பயனற்றதே. ஏனெனில் அவர் டி20-யில் அவ்வளவு பெரிய பிளேயரெல்லாம் இல்லை என்பதே கிரிக்கெட் உலகின் கருத்தாக உள்ளது. இந்நிலையில், ஜேசன் கில்லஸ்பியும் இதைத்தான் தன் விமர்சனக் கருத்தாக முன்வைத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் 2-வது அதிக விலை வீரர் ஆனார் பாட் கம்மின்ஸ். அதாவது, இவருக்குப் பிறகு இன்னொரு ஆஸ்திரேலிய வீரரான மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுத்ததும் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்த ஒன்றாகும். ஏனெனில், ‘4 ஓவர் போட்டு விட்டு முழங்காலையோ, கணுக்காலையோ, தோள்பட்டையையோ பிடித்துக் கொண்டு அவர் காயமடைந்து ஆட முடியாமல் போனால்?’ என்ற விமர்சனமே இந்த அதிகபட்ச தொகைக்கான எதிர்வினையாக இருந்து வருகின்றது.

இந்நிலையில், சென் ரேடியோவில் ஜேசன் கில்லஸ்பி கூறியது: “பாட் (கம்மின்ஸ்) ஒரு தரமான பவுலர் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. தரமான லீடரும் கூட ஆனால் டி20 வடிவம் அவருக்கு சரியானதல்ல. டி20 அவரது சிறந்த வடிவம் அல்ல. என் கருத்து என்னவெனில் அவர் ஒரு டெஸ்ட் பவுலர். டெஸ்ட் கிரிக்கெட் தான் அவருடைய அத்தியாவசிய வடிவம். அவர் ஒரு நல்ல டி20 பவுலர்தான். தவறுகள் அவ்வளவாக செய்யாதவர். ஆனாலும், என்னைப் பொறுத்தவரையில் அவரை ஏலம் எடுத்த இத்தனை பெரிய தொகையினால் அந்த 4 ஓவர்கள் மிகப் பெரிய ஓவர்களாகும்” என்றார் கில்லஸ்பி.

மிட்செல் ஸ்டார்க்கை பாட் கம்மின்சை விடவும் அதிக தொகைக்கு கொல்கத்தா எடுத்தது பற்றி கில்லஸ்பி கூறும்போது, கொல்கத்தாவுக்கு இது ஓர் அருமையான விஷயம் என்று பாராட்டினார், “மிட்செல் ஸ்டார்க்கை இத்தனை பெரிய தொகைக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தாவுக்கு நல்லதுதான். இது பெரிய தொகைதான் மறுப்பதற்கில்லை. ஆனால் ஐபிஎல் பண மழை தொடராகும். மிட்செல் ஸ்டார்க்கிற்காக நான் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன். அதாவது அணிகள் இடது கை வேகப்பந்து வீச்சாளரை எப்படி மதிக்கின்றன என்பதன் அளவு கோலாகும் இது” என்றார் கில்லஸ்பி.

SCROLL FOR NEXT