ட்ரினிடாடில் நடைபெற்ற இங்கிலாந்து - மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாமல் இருந்த ஃபில் சால்ட் 57 பந்துகளில் 7 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 119 ரன்களை விளாசி சாதனை புரிய, இங்கிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 267 ரன்கள் குவித்து சாதனை புரிந்தது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகளும் 15.3 ஓவர்களில் 192 ரன்கள் விளாசி ஆல் அவுட் ஆகி தோல்வி தழுவியது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என்று சமன் ஆகியுள்ளது. 5-வது போட்டி வியாழக்கிழமை இதே மைதானத்தில் நடைபெறுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மென் போவெல் செய்த ஒரே தவறு டாஸ் வென்று இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்ததே. காரணம் இதற்கு முதல் போட்டியில் 223 ரன்களை இங்கிலாந்து விரட்டியதே. இங்கிலாந்து அணியில் லியாம் லிவிங்ஸ்டன், ஜாஸ் பட்லர் அரைசதம் கண்டனர். ஐசிசி முழு உறுப்பு நாட்டுக்கு எதிராக இங்கிலாந்து எடுத்த 2வது டி20 சர்வதேச சாதனை ஸ்கோராகும் இது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் விடாப்பிடியாக சேஸிங்கை அதிரடியில் தொடங்கினர். 5.2 ஓவர்களில் 78 ரன்கள் குவித்தனர். ஆனால் அதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தனர். ஷெபானி ருதர்போர்ட் 15 பந்துகளில் 36 ரன்களை விளாச, ஆந்த்ரே ரஸல் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 51 ரன்கள் விளாசினார். ஆனால் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் 16வது ஓவரில் மே.இ.தீவுகள் கதை முடிந்தது.
இங்கிலாந்து அணியில் ஃபில் சால்ட், ஜாஸ் பட்லர் இணைந்து 117 ரன்களை 10 ஓவர்களில் விளாசி பிரமாதத் தொடக்கம் கொடுத்தனர். அதே போல் மே.இ.தீவுகள் அணியும் முதல் 7 ஓவர்களில் 100 ரன்களை விளாசினர். நிகலஸ் பூரன் (39), ஷெபானி ருதர்போர்டு காட்டடி அடித்து இலக்கை விரட்ட அடித்தளம் அமைத்தனர். ஆனால் தொடர் விக்கெட் சரிவுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆதில் ரஷீத் (ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படவில்லை) பிரமாதமாக வீசி மே.இ.தீவுகளைக் கட்டுப்படுத்தினார்.
ரீசி டாப்லி மே.இ.தீவுகளின் கடைசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரஸல் கடைசியாக ஆட்டமிழந்தார். ஆனால் மே.இ.தீவுகளின் பேட்டிங், ஆக்ரோஷமாக அமைந்ததை நாம் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
ஐபிஎல் ஏலத்தில் விற்காமல் போன ஃபில் சால்ட்டின் அசால்ட்: கடந்த சனிக்கிழமையன்று கிரெனடாவில் நடைபெற்ற டி20 போட்டியில் ஃபில் சால்ட் 109 ரன்களை விளாசி இங்கிலாந்து 223 ரன்களை வெற்றிகரமாக விரட்டியதற்கு காரணமான பில் சால்ட், நேற்று ஐபிஎல் ஏலத்தில் விற்காமல் போனதாலோ என்னவோ செம காட்டுக் காட்டினார். முதல் ஓவரிலேயே மேஇ.தீவுகளின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ ஃபோர்டை ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி விளாசினார். மாறாக பட்லர் மறு முனையில் தன் முதல் ரன்னை எடுக்க 9 பந்துகள் எடுத்துக் கொண்டார். ஆனால் அதன் பிறகு அருமையான ஒரு பவுண்டரியும் ஆக்ரோஷ ரிவர்ஸ் ஸ்வீப் சிக்சரையும் விளாசினார் பட்லர். சால்ட் மீண்டும் ஃபோர்டை இரு சிக்சர்கள் விளாச ஒரே ஓவரில் 22 ரன்கள் எடுக்கப்பட, பவர் ப்ளேயில் 68 ரன்கள் குவித்தது இங்கிலாந்து.
ஃபில் சால்ட் 23 பந்துகளில் அரைசதம் எடுத்தார். பட்லர் 26 பந்துகளில் மைல்கல்லை எட்டினார். பின்னர் பட்லர், ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் இங்கிலாந்து 117/1. ஒரு விக்கெட் போனாலும் அதிரடி போகவில்லை. மீண்டும் ருதர்போர்டு சிக்க 3 சிக்சர்களை விளாசித்தள்ளி பட்லர் இழப்பு என்னை பாதிக்காது என்று நிரூபித்தார் சால்ட். வில் ஜாக்ஸ் 24 ரன்களில் 2 சிக்சர்கள் விளாசி அகீல் ஹுசைனிடம் வீழ்ந்தார்.
ஃபில் சால்ட் ஒரு கட்டத்தில் லியாம் லிவிங்ஸ்டனின் 42 பந்து டி20 சத சாதனையை முறியடிக்கும் நிலையில் இருந்தார். ஆனால் கொஞ்சம் ஸ்லோ ஆனதால் 48 பந்துகளில் சதம் கண்டார். 57 பந்துகளில் 10 சிக்சர்களுடன் 119 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் அதிகபட்ச டி20 ஸ்கோர் சாதனையை நிகழ்த்த உதவினார். சால்ட் கடைசியாக ரஸலின் யார்க்கரில் அவுட் ஆக, லிவிங்ஸ்டன் அதிரடியை பார்த்துக் கொண்டார். கடைசி ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் லிவிங்ஸ்டன் 50 கண்டார். இதற்கு முன்பாக அயர்லாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 278 ரன்களை விளாசியதுதான் டி20 வரலாறு, இப்போது இங்கிலாந்து 2வது பெரிய ஸ்கோரை எடுத்தது. கடைசி போட்டி வியாழனன்று நடைபெறுகிறது. இதில் தொடரை வெல்பவர் யார் என்று தெரியவரும்.