மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் போராடி காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.
ஆடவர் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டங்கள் இன்று நடந்தன. இதில் அர்ஜென்டீனா வீரர் டீகோ ஸ்வார்ட்ஸ்மெனை எதிர்கொண்டார் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் நடால்.
3 மணிநேரம் 51 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் டீகோவை 6-3, 6-7(4-7), 6-3, 6-3 என்ற செட்களில் போராடி வீழ்த்தி காலிறுதிக்கு நடால் தகுதிபெற்றார்.
இந்த 3 மணி நேர ஆட்டத்தில் இரு வீரர்களும் 18 பிரேக் புள்ளிகளை சந்தித்தபோதிலும், , அதில் 15 புள்ளிகளை நடால் தனதாக்கினார்.
இந்த வெற்றி குறித்து நடால் கூறுகையில், ''இந்த வெற்றி எனக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. ஏறக்குறைய 4 மணிநேரம் களத்தில் இருந்து வெற்றிக்காக போராடி இருக்கிறேன். காலிறுதியை உற்சாகமாக எதிர்பார்க்கிறேன்'' எனத் தெரிவித்தார். இந்த வெற்றி மூலம் ஏ.டி.பி. தரவரிசையில் தனது முதலிடத்தை நடால் தக்கவைத்துக் கொண்டார்.
காலிறுதி ஆட்டத்தில் குரோஷிய வீரர் மரின் சிலிக்கை எதிர்கொள்கிறார் நடால். 4-வது சுற்றில் ஸ்பெயின் வீரர் பாப்ளோ கரேரீனோ புஸ்டாவை 6-7(2-7), 6-3, 7-6(7-0), 7-6(7-3) என்ற செட்களில் சாய்த்து சிலிக் காலிறுதிக்கு தகுதிபெற்றார்.