விளையாட்டு

லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி: சில புள்ளி விவரங்கள்

செய்திப்பிரிவு

இஷாந்த் சர்மாவின் எழுச்சிப் பந்து வீச்சினால் இங்கிலாந்தை லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு வென்றது இந்தியா. இங்கிலாந்தில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் இது 6வது வெற்றி.

தோனியின் கேப்டன்சியின் கீழ் இந்தியா 27 டெஸ்ட் போட்டிகளில் வென்று, 14-ல் தோற்று, 14-ல் டிரா செய்துள்ளது. வெற்றி விகிதம்:49.09%

டெஸ்ட் போட்டி ஒன்றில் 4-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய பவுலர் ஆனார் இஷாந்த் சர்மா. ஆமதாபாத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 1996-97-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜவகல் ஸ்ரீநாத் 21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே 4வது இன்னிங்ஸின் அதிகபட்ச விக்கெட்டாக இருந்தது.

இஷாந்த் சர்மாவின் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தப் பந்து வீச்சு இந்தியாவுக்கு வெளியே 4வது சிறந்த பந்து வீச்சாகும். கபில்தேவ் 1982ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக லாகூரில் 8 விக்கெட்டுகளை 85 ரன்களுக்குக் கைப்பற்றியுள்ளார். அதேபோல் கபில்தேவ் 1985-86 தொடரின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட்டில் 106 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்தில் ஒரு இன்னிங்சில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய பவுலரும் இஷாந்த் சர்மாவேயாவார்.

துணைக்கண்ட பவுலர் ஒருவர் லார்ட்ஸில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இதுவே முதல் முறை. மொத்தமாக லார்ட்ஸில் சிறப்பாக வீசிய 5வது பவுலர் ஆவார் இஷாந்த் சர்மா. கிளென் மெக்ரா லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 1997ஆம் ஆண்டு 38 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே அந்த மைதானத்தில் அயல்நாட்டு வீச்சாளர் வீசிய சிறந்த பந்து வீச்சாகும்.

ஒரே டெஸ்ட் போட்டியில் இருவேறு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 6 அல்லது அதற்கும் கூடுதலான விக்கெட்டுகளைக் கைப்பற்றிய விதத்தில் புவனேஷ் குமார் (6/82), இஷாந்த் சர்மா (7/74) புதிய இந்திய சாதனை படைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெற்ற வெற்றியோடு இங்கிலாந்து வெற்றிகளை மறந்து போனது. பிறகு 10 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெறவில்லை. 7 போட்டிகளில் தோற்று, 3-ஐ டிரா செய்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ் கடைசி 10 சர்வதேச டெஸ்ட் இன்னிங்ஸ்களில் வைத்திருக்கும் பேட்டிங் சராசரி 1.80. 10 இன்னிங்ஸ்களில் 6 பூஜ்ஜியம், அதிகபட்ச ஸ்கோர் 5.

SCROLL FOR NEXT