ஸ்பெயின் நாட்டில் லோப்ரெகட் ஓபன் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 22 வயதான வைஷாலி 2-வது சுற்றில்துருக்கியை சேர்ந்த ஃபிடே மாஸ்டரான தமேர் தாரிக் செல்ப்ஸை தோற்கடித்தார். இதன் மூலம் வைஷாலி 2,500 எலோ புள்ளிகளை கடந்து கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
கடந்த அக்டோபர் மாதம் கத்தாரில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் தொடரில் வைஷாலி, கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்வதற்கான 3-வது நார்மை பூர்த்தி செய்திருந்தார். தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற கிராண்ட் சுவிஸ் தொடரில் அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தி வைஷாலி வெற்றி கண்டார். இதன் மூலம் அவர், கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை நெருங்கினார். தற்போது அந்த இலக்கை ஸ்பெயின் போட்டியில் அடைந்துள்ளார்.
இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை வைஷாலி பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இந்தியாவின் கோனேரு ஹம்பி,ஹரிகா துரோணவல்லி ஆகியோர்கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றிருந்தனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருந்து கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற 84-வது நபர் வைஷாலி ஆவார். அதேவேளையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பட்டியலில் வைஷாலி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆர்.வைஷாலி, இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார். இதன் மூலம் உலக செஸ் வரலாற்றில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற முதல் சகோதர-சகோதரி என்ற சாதனையையும் படைத்துள்ளார் வைஷாலி. பிரக்ஞானந்தா தனது 12 வயதில், கடந்த 2018-ம் ஆண்டு கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றிருந்தார்.
சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் விளையாட ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளனர். உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி சுற்றான இந்த தொடர் 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டொராண்டோவில் நடைபெறுகிறது.
என்ன சொல்கிறார் வைஷாலி? கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றது குறித்து ஆர்.வைஷாலி கூறும்போது, “இறுதியாக கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை நிறைவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும், ஸ்பெயின் போட்டியில் இரு சுற்றுகளிலேயே இது நிகழ்ந்துள்ளது. நான் செஸ் விளையாட்டு விளையாட தொடங்கிய நாளில் இருந்தே ஏற்பட்ட லட்சியத்தை இறுதியாக தற்போது அடைந்துள்ளேன். கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை நெருங்கிய போது உற்சாகமாக இருந்தேன். ஆனால் சில அழுத்தங்களும் இருந்தன. இதனால் சிறிது காலம் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இதை எல்லாம் கடந்து வெற்றி பெற்று கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளேன். எனது அடுத்த இலக்கு கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு சிறந்த முறையில் தயாராகுவதுதான்” என்றார்.
கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழர்கள்: விஸ்வநாதன் ஆனந்த், சசிகிரண், ஆர்.பி.ரமேஷ், தீபன் சக்ரவர்த்தி, சுந்தர்ராஜன் கிடாம்பி, ஆர்.ஆர்.லட்சுமண், பி.மகேஷ் சந்திரன், எம்.ஆர்.வெங்கடேஷ், எஸ்.அருண் பிரசாத், பி.அதிபன், எஸ்.பி.சேதுராமன், எம்.ஷியாம் சுந்தர், வி.விஷ்ணு பிரசன்னா, கார்த்திக்கேயன் முரளி, வி.ஆர்.அர்விந்த் சிதம்பரம், அஸ்வின் ஜெயராம், கே.பிரியதர்ஷன், என்.நாத், ஆர்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ், பி.கார்த்திக்கேயன், என்.ஆர்.விசாக், பி.இனியன், ஜி.ஆகாஷ், ஆர்.வைஷாலி.
12 வருடங்களுக்குப் பிறகு.. 12 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து 3-வது பெண் கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வைஷாலி. கடைசியாக 2011-ம் ஆண்டு ஹரிகா துரோணவல்லி கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றிருந்தார். அதற்கு முன்னதாக கோனேரு ஹம்பி 2002-ம் ஆண்டு தனது 15 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார். உலக அளவில் இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற வீராங்கனை என்ற சாதனை இவர், வசமே இன்றும் உள்ளது.
நார்ம்களை பூர்த்தி செய்த விதம்: கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்வதற்கு 3 நார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த வகையில் வைஷாலி முதல் நார்மை கடந்த 2019-ம் ஆண்டு டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற எக்ஸ்ட்ராகான் ஓபன் ஓபனில் நிறைவு செய்தார். தொடர்ந்து 2-வது நார்மை 2022-ம் ஆண்டு கிரீஸ் நாட்டின் ஹெராக்லியன் நகரில் நடைபெற்ற 8-வது பிஷ்ஷர் மெமோரியல் தொடரில் பூர்த்தி செய்தார். இறுதியாக 3-வது நார்மை கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கத்தார் மாஸ்டர்ஸ் தொடரில் நிறைவு செய்தார் வைஷாலி. 2497 புள்ளிகளுடன் ஸ்பெயின் போட்டியில் பங்கேற்றுள்ள வைஷாலி முதல் இரு சுற்றுகளில் வெற்றி பெற்றதன் மூலம் 2501.5 புள்ளிகளை கடந்து கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார்.
வைஷாலிக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து: கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றமுதல் தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு தெலங்கானா ஆளுநர், தமிழக முதல்வர், தலைவர்கள்வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: செஸ்போட்டிகளில் மிக உயரிய பட்டமான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைபெற்ற தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை வைஷாலிக்கு என்மனமார்ந்த வாழ்த்துகள். கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறும் முதல்தமிழக வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ள அவர்,செஸ் போட்டிகளில் பல உலகசாதனைகள் படைத்து தமிழகத்துக்கும், நம் பாரத தேசத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்தியாவின் 3-ம் பெண் கிராண்ட் மாஸ்டராகவும், தமிழகத்தின் முதல் பெண்கிராண்ட் மாஸ்டராகவும் உயர்ந்துள்ள வைஷாலிக்கு எனதுபாராட்டுகள்.ஏற்கெனவே பிரக்ஞானந்தாவுடன் இணைந்து கேண்டிடேட்ஸ் தொடருக்குத் தகுதி பெற்றதன் மூலம், அத்தொடருக்குத் தகுதி பெற்ற முதல் உடன் பிறந்தவர்கள் என்ற வரலாற்றையும் படைத்தார்.
தற்போது மணிமகுடமாக கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்று,முதல்முறையாக உடன் பிறந்தோர் இருவர் கிராண்ட்மாஸ்டராக இருக்கும் சாதனையைப் படைத்துள்ளனர். இந்த சாதனைகளால் மிகவும்பெருமைகொள்கிறோம். வைஷாலியின் பயணம் செஸ் ஆர்வம் கொண்ட பலருக்கும் ஊக்கமாகவிளங்குகிறது. தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்கானஅடையாளமாகத் திகழ்கிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு மனமார்ந்த பாராட்டுகள். தமிழக அளவில் முதல் பெண் கிராண்ட் மாஸ்டராகவும் சாதனை படைத்துள்ள வைஷாலி உலக அரங்கில் மென்மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழகத்தில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் செஸ் வீராங்கனை என்றபெருமையை பெற்றுள்ள வைஷாலிக்கு மனமார்ந்த பாராட்டுகள். அவர் மேலும் பல உயரிய விருதுகளை பெற எனது நல்வாழ்த்துகள்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: கடுமையான உழைப்பு மற்றும் விடா முயற்சியின் மூலம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றிருக்கும் வைஷாலிக்கு பாராட்டுகள். அடுத்தடுத்துநடைபெறும் உலகளவிலான போட்டிகளில் பதக்கங்களை குவித்து தாய்நாட்டுக்கு மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.