குவாஹாட்டி: 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் பனிப்பொழிவு காரணமாக ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல்லைகடைசி வரை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
குவாஹாட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 223 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தனது 100-வது ஆட்டத்தில் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 104 ரன்களை விளாசிஇந்திய அணியின் வெற்றியை பறித்தார். அதிலும் கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 43 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி எந்தவித சிரமமும்இன்றி இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.
அக்சர் படேல் வீசிய 19-வது ஓவரை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பதம் பார்த்தார். அவரது ஓவரில் 22 ரன்கள் விளாசப்பட்டது. இதன் பின்னர் பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவையாக இருந்தநிலையில் முதல் இரண்டு பந்துகளில் மேத்யூ வேட் 5 ரன்கள் சேர்க்க 3-வது பந்தில் சிக்ஸர் விளாசிய மேக்ஸ்வெல் அதன் பின்னர் எஞ்சிய 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச் செய்தார்.
இந்த வெற்றியால் 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரைஆஸ்திரேலிய அணி உயிர்ப்பிப்புடன் வைத்துள்ளது. தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில் 4-வது டி 20 போட்டி நாளை (டிசம்பர் 1-ம் தேதி) ராய்பூரில் நடைபெறுகிறது.
குவாஹாட்டி போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:
திருவனந்தபுரத்தில் நாங்கள் விளையாடிய 2-வது ஆட்டத்திலும் பனிப்பொழிவு இருந்தது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்தது. ஆனால் இங்கு அவர்கள், விக்கெட்களை கைவசம் வைத்திருந்தனர். இதனால் ஆட்டம் அவர்கள் பக்கம் இருப்பதை உணர்ந்தேன். குடிநீர் இடைவேளையின் போது கிளென் மேக்ஸ்வெல்லை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என வீரர்களிடம் கூறினேன். ஆனால் அது நியாயமற்றது. ஏனெனில் பனிப்பொழிவு அதிக அளவில் இருந்தது.
அக்சர் படேலை 19-வது ஓவரை வீச அழைத்ததற்கு காரணம் இதற்கு முன்னர் அவர், 19 மற்றும் 20-வது ஓவர்களை வீசியுள்ளார் என்பதுதான். அவர், அனுபவம் வாய்ந்தவர். ஒரு சுழற்பந்து வீச்சாளராக இருந்தாலும், கடினமான பனிப்பொழிவில் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன். பேட்டிங்கை பொறுத்தவரையில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடினார். நான், ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் சென்றார். அவர், சிறப்பு வாய்ந்த வீரர். அணியில் உள்ள வீரர்களை நினைத்தால் பெருமையாக உள்ளது. இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.