லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா வீசும்போது விக்கெட் கீப்பர் தோனி சில அடிகள் தள்ளி நின்றது பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தது.
வர்ணனையில் ஷேன் வார்ன் தொடர்ந்து கேப்டன் தோனியின் இந்த விக்கெட் கீப்பிங் உத்தியை கேலியும், விமர்சனமும் செய்து வந்தார். காரணம் ஸ்பின்னருக்கு தள்ளி நின்றால் அது பேட்ஸ்மென்கள் பயமின்றி மேலேறி வந்து பந்தை சுலபமாக அடித்து நொறுக்க வழிவகுக்கும் என்று வர்ணனையில் இருந்த முன்னாள் வீரர்கள் கருதினர்.
ஆனால் தோனி ஏன் சில அடிகள் பின்னால் நின்றார் என்பதற்கான விளக்கங்களை அளித்துள்ளார்:
லெக் திசையில் அருகே 3 பீல்டர்களை நிறுத்த நினைத்தேன், ஆனால் விதிமுறைகள் அதற்கு இடம்கொடுக்கவில்லை. விராட் கோலியை லெக் ஸ்லிப்பில் சற்றே தள்ளி நிற்கக் கோரினேன். இதனால் லெக் திசையில் எட்ஜில் பட்டு வரும் பந்துகள் எனக்கும் கோலிக்கும் இடையே சென்று கொண்டிருந்தது.
ஆகவே அந்த இடைவெளியைக் குறைத்து கேட்ச் வாய்ப்பை அதிகப்படுத்த நான் சில அடிகள் தள்ளி நின்றேன். ஆனால் நான் தள்ளி நிற்பதைப் பயன்படுத்தி பேட்ஸ்மென்கள் மேலேறி வந்து ஆடினால் முன்னால் வந்துதான் ஆகவேண்டும். அவர்கள் நான் தள்ளி நின்றதைப் பயன்படுத்தி மேலேறிச் சென்று ஆடவில்லை. ஆகவே நான் சுதந்திரமாக எனது உத்தியைப் பயன்படுத்தினேன். ஆனால் கேட்ச்கள் வரவில்லை என்பதே உண்மை.
பேட்ஸ்மென்கள் மேலேறி ஆடி நான் ஸ்டம்பிங் வாய்ப்பை இதனால் கோட்டை விட்டிருந்தால் வர்ணனையாளர்கள் விமர்சனம் சரியாகவே இருந்திருக்கும். ஆனால் ஆட்டம் என்பது அந்தந்த தருணத்தில் சரியாகச் செய்ய வேண்டிய உத்திகளைக் கோருவது, நடப்பு கிரிக்கெட் ஆட்டம் அப்படி மாறியுள்ளது, ஆகவே நான் கவலைப்படவில்லை.
இவ்வாறு கூறினார் தோனி.