விளையாட்டு

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேச அணி 310 ரன்கள் குவிப்பு

செய்திப்பிரிவு

சில்ஹெட்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது.

டிம் சவுதி தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இதில் முதல் போட்டி சில்ஹெட் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய அந்த அணிக்கு மஹ்மதுல் ஹசன் ஜாய், ஜாகீர் ஹசன் ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது.

ஜாகீர் ஹசன் 41 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்த நிலையில் அஜாஸ் படேல் பந்தில் போல்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 12.3 ஓவர்களில் 39 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் களமிறங்கிய நஜ்முல் ஹோசைன் ஷான்டோ விரைவாக ரன்கள் சேர்த்தார். மட்டையை சுழற்றிய அவர் 35 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் கிளென் பிலிப்ஸ் பந்தை விளாச முயன்ற போது டீப் மிட்-ஆன் திசையில் நின்ற கேன் வில்லியம்சனிடம் கேட்ச் ஆனது.

மஹ்மதுல் ஹசன் ஜாயுடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தார் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ. இதைத் தொடர்ந்து களமிறங்கிய மோமினுல் ஹக் பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார். மதிய உணவு இடைவேளையில் வங்கதேச அணி 27 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்தது. உணவு இடைவேளைக்கு பின்னர் வங்கதேச அணி தொடர்ந்து விளையாடியது. 88 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை கிளென் பிலிப்ஸ் பிரித்தார். மோமினுல் ஹக் 78 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் கிளென் பிலிப்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் டாம் பிளண்டலிம் பிடி கொடுத்து நடையை கட்டினார்.

தனது 4-வது அரை சதத்தை அடித்த மஹ்மதுல் ஹசன் ஜாய் 166 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்த நிலையில் இஷ் சோதி பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் சீரான இடைவெளியில் வங்கதேச அணி விக்கெட்களை இழந்தது. முஸ்பிகுர் ரகிம் 12, மெஹிதி ஹசன் 20, ஷஹதத் ஹோசைன் 24, நூருல் ஹசன் 29, நயீம் ஹசன் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் வங்கதேச அணி 85 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்தது. தைஜூல் இஸ்லாம் 8, ஷோரிபுல் இஸ்லாம் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் கிளென் பிலிப்ஸ் 4, கைல் ஜேமிசன் 2, அஜாஸ் படேல் 2, இஷ் சோதி 1 விக்கெட் கைப்பற்றினர். கைவசம் ஒரு விக்கெட் இருக்க இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடு கிறது வங்கதேச அணி.

SCROLL FOR NEXT