மங்கிய நட்சத்திரங்கள்
சச்சின் டெண்டுல்கர் ஓய்வுபெற்றுவிட்டார். அவருக்கு முன்பே ராகுல் திராவிடும் வி.வி.எஸ். லட்சுமணனும் ஓய்வுபெற்றுவிட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மட்டை வலுவின் ஆதாரமான தூண்களாக இருந்தவர்கள் விலகிய நிலையில் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் மூத்த வீரர்கள் வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், ஆகியோர் இந்திய அணியின் மட்டை வலுவைத் தாங்கிப் பிடிப்பார்கள் என நம்பப்பட்டது.
இவர்கள் தத்தமது இடங்களிலிருந்து அளித்த பங்களிப்புகள் இந்தியா டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் பெற முக்கியக் காரணமாக இருக்கின்றன. பல தோல்விகளுக்குப் பிறகும் இன்னமும் இரண்டாம் இடத்தில் இருப்பதற்கு இவர்களது பங்களிப்பும் ஒரு காரணம்.
இவர்கள் இருவரும் இன்னும் ஓய்வுபெறவில்லை என்னும் நிலையில் மூத்த வீரர்களின் விலகல் இந்திய அணியைப் பெரிதாக பாதிக்க வாய்ப்பில்லை என்றே அனைவரும் கருதினார்கள். ஆனால் இவர்கள் இருவராலும் அந்த நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. சச்சின் ஓய்வுபெறுவதற்கு முன்பே இவர்கள் அணியிலிருந்து விலக்கப்பட்டார்கள். இவர்களை ஏன் நீக்கினீர்கள் என்று யாருமே உரக்கக் குரல் எழுப்பவில்லை.
காரணம் அண்மைக் காலமாக இவர்களது ஆட்டம் எங்கும் எந்த வடிவிலும் சோபிக்கவில்லை. ஐ.பி.எல்., ரஞ்சி உள்பட எந்தப் போட்டியிலும் பெரும் தாக்கத்தை இவர்கள் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இவர்களது திறமையை ஆராதிப்பவர்களும் இவர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களும் மௌனமாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
உடல் நலம் காரணமாக விலகியிருந்த நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கின் நிலையும் கிட்டத்தட்ட இதேதான். பெரும் போராட்டத்திற்குப் பிறகு மீண்டு வந்த இவர் ஒரு நாள் போட்டிகளில் ஓரளவு நன்றாகவே ஆடினார். ஆனால் பழைய வேகமோ பந்து வீச்சை நொறுக்கித்தள்ளும் வலிமையோ அவர் மட்டைக்கு இப்போது இல்லை என்பது வெளிப்படை. அவ்வப்போது முக்கியமான பங்களிப்பைச் செலுத்தினாலும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைப்பவர் என்னும் பெருமையை இவர் மீண்டும் எட்டவே இல்லை. எனவே நியூஸிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இவர் இடம்பெறாதபோது இவருக்காக எழுந்த அனுதாபம் யதார்த்தத்தை உணர்ந்த மௌனமாகவே வெளிப்பட்டது.
காம்பீருக்கும் யுவராஜுக்கும் 32 வயதுதான் ஆகிறது என்பதால் இருவருக்கும் இன்னொரு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் 35 வயதான சேவாகின் வாய்ப்பு அந்த அளவுக்குப் பிரகாசமாக இல்லை. களத்தடுப்பில் அவரது பலவீனமும் அவரது மறுவருகையைக் கேள்விக்குரியதாக்குகிறது. சுடர் விட்டுப் பிரகாசித்த இந்த நட்சத்திரங்கள் மங்கியதன் மௌன சாட்சியாகக் கடந்து சென்றது 2013.
எழுச்சி பெற்ற இளம் நட்சத்திரங்கள்
மூத்த வீரர்கள் விலகிய, நீக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து எழுந்த ஐயங்களை ஷிகர் தவன், முரளி விஜய், சதீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ரோஹித் ஷர்மா, அஜிங்க்ய ரஹானே ஆகிய இளம் வீரர்கள் போக்கிவிட்டார்கள். புஜாரா, கோலி, விஜய், ரஹானே ஆகியோர் இந்திய மண்ணில் மட்டுமின்றி அன்னிய மண்ணிலும் தங்கள் திறமையைக் காட்டினார்கள். தவனும் ஷர்மாவும் இந்திய மண்ணில் பிரகாசித்த அளவுக்கு அன்னிய மண்ணில் சோபிக்கவில்லை என்றாலும் சோடைபோகவில்லை.
அறிமுக ஆட்டத்திலேயே ஆஸ்திரேலியப் பந்து வீச்சைச் சிதற அடித்த தவன், அடுத்தடுத்து சதங்கள் அடித்த ஷர்மா, தென்னாப்பிரிக்காவில் வேகப்பந்து வீச்சை எதிர்த்து நின்று ரன் குவித்த விஜய், புஜாரா, கோலி, ரஹானே ஆகியோர் புகழ்பெற்ற இந்திய மட்டை வலுவின் மரபைத் தொடர்கிறார்கள். அதன் வளமான எதிர்காலத்துக்கான உத்தரவாதத்தையும் அளிக்கிறார்கள்.
2013ஆம் ஆண்டை இளைஞர்கள் ஆண்டு என்று இவர்கள் சொல்லவைத்தார்கள். இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் வென்றுவந்த இந்த இளம் அணி தென்னாப்பிரிக்காவிலும் தன் திறமையை நிரூபித்தது. நியூஸிலாந்து தொடர் என்னும் அடுத்த சவாலுக்கு இளம் இந்திய அணி தயாராக இருக்கிறது.