இந்தியா - தெ.ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது குறித்து கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில், "பிட்ச் மோசம்தான்; ஆனால் இந்திய வீரர்கள் தாக்குப்பிடித்தார்களே. அம்பயர்கள் இப்போதுதான் பிட்சை கவனமாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்" எனக் கிண்டலாக பதிவிட்டிருந்தார்.
ஏற்கெனவே ஹர்பஜன் சிங்கும் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். தென் ஆப்பிரிக்கா விளையாட வேண்டாம் என நினைத்ததாலேயே ஆட்டத்தை சாக்குபோக்கு சொல்லி நிறுத்தியது என தனது ட்விட்டரில் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
ஹர்ஷா போக்லேவின் ட்வீட்டையும் ஹர்பஜன் ரீட்வீட் செய்திருந்தார்.
நடந்தது என்ன?
ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. இதில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இதையடுத்து 241 ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்ய தொடங்கியது.
தொடக்க வீரரான மார்க்ரம் 7 பந்துகளில், 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்தில், பார்த்திவ் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹசிம் ஆம்லா களமிறங்கினார். பும்ரா வீசிய 9-வது ஓவரின் 3-வது பந்து டீன் எல்கரின் ஹல்மெட்டை தாக்கியது. ஷாட் பிட்ச்சாக வீசப்பட்ட இந்த பந்தை டீன்எல்கர் தடுத்தாட முயன்றிருந்தார்.
பந்து தாக்கியதை தொடர்ந்து டீன் எல்கர், உடனடியாக நெற்றி பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு ஐஸ் பேக் சிகிச்சை பெற்றார். இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 11, ஆம்லா 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
கணிக்க முடியாத வகையில் பந்துகள் எகிறி வந்த நிலையிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தனர். எனவே ஒரே ஒரு பந்து ஹெல்மெட்டை தாக்கியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது சற்று வியப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து இரு அணிகளின் கேப்டன்களையும் அழைத்து மேட்ச் ரெப்ரி பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே இரு அணி வீரர்களும் களத்தில் இருந்து வெளியேறினர். பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.