விளையாட்டு

பயங்கர பவுன்சரில் முகம் பெயர்ந்த இங்கிலாந்து பேட்ஸ்மென் கீஸ்வெட்டர்

செய்திப்பிரிவு

இங்கிலாந்து அணியின் 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அதிரடி வீரரான கீஸ்வெட்டர் கவுண்டி கிரிக்கெட்டில் பயங்கர பவுன்சரில் படுகாயமடைந்தார்.

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான சாமர்செட் அணிக்கு விளையாடி வரும் கீஸ்வெட்டர், நார்த்தாம்டன் ஷயர் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 4 நாள் கிரிக்கெட் போட்டியில் 14 ரன்கள் எடுத்திருந்த போது இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.ஜே.வில்லே என்பவரது பயங்கர பவுன்சரை புல் ஷாட் ஆட முயன்றார்.

ஆனால் பந்து எதிர்பார்த்ததை விட அதிக உயரம் எழும்பி ஹெல்மெட்டிற்குள் புகுந்து அவரது வலது கண்ணிற்குக் கீழும், மூக்கையும் சரியாகப் பதம் பார்த்தது.

ரத்தம் கொட்ட அவர் பிட்சில் அப்படியே சரிந்தார். இந்த பலத்த அடியில் அவரது முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மூக்கிலும் பலத்த அடி.

அடிபட்ட கிரெய்க் கீஸ்வெட்டர், 46 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 1054 ரன்களை 30.11 என்ற சராசரியில் பெற்றுள்ளார். 107 இவரது அதிகபட்ச ஸ்கோர். ஸ்ட்ரைக் ரேட் வலுவாக 89.93 என்று வைத்துள்ளார். விக்கெட் கீப்பராக 12 ஸ்டம்பிங்குகளைச் செய்துள்ளதோடு, 53 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.

இவரைக் காயமடையச் செய்த டி.ஜே.வில்லே அதன் பிறகு பேட்டிங்கில் இறங்கி 45 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 53 ரன்கள் விளாசி சாமர்செட் அணியின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினார்.

இங்கிலாந்து அணியின் அடுத்த சிறந்த ஆல்ரவுண்டர் என்று பேசப்பட்டு வரும் டேவிட் வில்லேவுக்கு வயது 24.

இருபது ஓவர் போட்டி ஒன்றில் 19 பந்துகளில் அரைசதம் கண்ட அவர், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, ஒரு ரன் அவுட்டையும் சாதித்தார். இவரை நார்த்தாம்டன் போத்தம் என்றே அங்கு அழைக்கின்றனர். இவர் முன்னாள் இங்கிலாந்து வீரரும் நடுவருமான பீட்டர் வில்லேயின் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாமே!

SCROLL FOR NEXT