ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று டான் போஸ்கோ - ஏவிஎம் ராஜேஸ்வரி அணிகள் மோதுகின்றன. மாலை 6.30 மணிக்கு திருநெல்வேலி சங்கர் நகர் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
முத்தூட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் பள்ளிகள் இடையிலான மாநில அளவிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 2-வது கட்ட ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகின்றன. 8 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரின் அரை இறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. முதலில் நடைபெற்ற அரை இறுதியில் கோவை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் - சென்னை டான் போஸ்கோ அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த டான் போஸ்கோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. எஸ்.கணேஷ் 57 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் விளாசினார். வி.அபிஷேக் 37 ரன்கள் சேர்த்தார். ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் அணி தரப்பில் டி.பிரசாந்த் 20 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்கள் கைப்பற்றினார். இதையடுத்து 143 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 95 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
அதிகபட்சமாக டி.அஷ்வத் 42 ரன்கள் சேர்த்தார். டான் போஸ்கோ அணித் தரப்பில் ஆதித்யா கீதன், டி.எம்.ஸ்ரேயஸ், ஏ.அஷ்ரித் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக கணேஷ் தேர்வானார். 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டான் போஸ்கோ அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2-வது அரை இறுதி ஆட்டத்தில் சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி - திருச்சி ஸ்ரீரங்கம் ஆடவர் அரசு பள்ளி அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஏவிஎம் ராஜேஸ்வரி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. ஆதித்யா வெங்கடேஷ் 32, ஏ.மகேஷ் 22 ரன்கள் சேர்த்தனர். ஸ்ரீரங்கம் அணித் தரப்பில் எம்.விக்னேஷ்வரன் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
135 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஸ்ரீரங்கம் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 98 ரன்களே சேர்க்க முடிந்தது. அதிகபட்சமாக எஸ்.சூர்யநாராயணன் 46 ரன்கள் சேர்த்தார். ஏவிஎம் ராஜேஸ்வரி அணித் தரப்பில் விக்னேஷ் யாதவ், ஏ.மகேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஆதித்யா வெங்கடேஷ் தேர்வானார். 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஏவிஎம் ராஜேஸ்வரி அணி இறுதிப் போட்டியில் கால் பதித்தது. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீமானிக்கும் இறுதிப் போட்டியில் இன்று மாலை 6.30 மணிக்கு டான் போஸ்கோ - ஏவிஎம் ராஜேஸ்வரி அணிகள் மோதுகின்றன. மின்னொளியில் நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.