கரீபியன் பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஷோயப் மாலிக் மற்றும் டினோ பெஸ்ட் ஆகியோர் முறைதவறி நடந்து கொண்டதற்காக கடும் அபராதம் விதிக்கப்பட்டனர்.
நேற்று முன் தினம் பார்படாஸ் டிரைடெண்ட்ஸ் அணிக்கும், செயிண்ட் லூசியா சூக்ஸ் அணிக்கும் 20 ஓவர் போட்டி நடைபெற்றது.
ஆட்டத்தின் 15வது ஓவரில் 49 ரன்கள் எடுத்த ஷோயப் மாலிக், டினோ பெஸ்ட் வீசிய பந்தைக் கோட்டைவிட ஸ்டம்ப் சில அடி தூரம் பறந்தது. உடனே ஷோயப் மாலிக்கை நோக்கி கடுமையான கெட்ட வார்த்தைகளினால் வசை தொடுத்தார் டினோ பெஸ்ட்.
வசையைத் தாங்க முடியாத ஷோயப் மாலிக், டினோ பெஸ்ட்டின் தோள்பட்டையில் கையை வைத்தார்.
இதனையடுத்து டினோ பெஸ்ட் விதிமீறல்களில் 2 பிரிவின் கீழ் குற்றம்சாட்டப்பட்டார். அதாவது, ஆட்டத்தின் மரியாதையைக் குறைத்ததற்காகவும், சக வீரரை நோக்கி அசிங்கமான வார்த்தை அல்லது செய்கை புரிந்ததற்காகவும் அவரது ஆட்டத்தொகையில் 60% அபராதம் விதிக்கப்பட்டது.
ஷோயப் மாலிக், டினோ பெஸ்ட்டின் மீது கையை வைத்ததற்காக அவரது ஆட்டத் தொகையிலிருந்து 50% அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது