விளையாட்டு

பந்தை சேதப்படுத்தினேனா?- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்மித் விளக்கம்

ஏஎஃப்பி

தான் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த சந்தேகங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நிராகரித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், தனது வாயின் ஓரத்திலிருந்து எச்சிலை எடுத்து பந்தில் தடவினார். இது வீடியோவாகவும் பதிவானது. பந்துவீச்சுக்கு சாதகமாக ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்தினாரா என்ற சந்தேகமும் எழுந்தது.

இது குறித்து பதிலளித்த ஸ்மித், இது வெள்ளைப் பந்தை பிரகாசமாக்க, தான் வழக்கமாக கையாளும் உத்தி என்று கூறினார். "அது எச்சில் மட்டுமே. ஏதோ தைலம் தடவினேன் என்று சிலர் சொன்னார்கள். எனது உதடுகளை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். அவை உலர்ந்து போயிருந்தன. என் உதட்டில் எந்தத் தைலமும் இல்லை. எச்சிலை வாயின் ஓரம் கொண்டு வந்து அதை நான் பந்தில் தேய்ப்பதே வழக்கம். வேறெதுவும் இல்லை" என்று ஸ்மித் விளக்கம் தந்துள்ளார்.

கடந்த மாதம் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை தனது கட்டை விரல் நகத்தால் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்தப் புகாருக்கு இங்கிலாந்து தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்தது. இங்கிலாந்து பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ்ஸும் இந்தப் புகாரை நிராகரித்தார். செய்தியைப் பார்த்தவுடன் ஆட்ட நடுவர்களிடம் தான் சென்று விளக்கம் கேட்டதாகவும், அவர்கள் இதில் எந்த பிரச்சினையும் இல்லை, கவலை வேண்டாம் என்று பதிலளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக 0-4 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT