விளையாட்டு

ODI WC 2023 | ஆப்கானிஸ்தானுக்கு 4-வது வெற்றி!

செய்திப்பிரிவு

லக்னோ: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி.

லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 86 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 58 ரன்களும், மேக்ஸ் ஓ’டவுட் 40 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 42 ரன்களும் சேர்த்தனர். வெஸ்லி பாரேசி 1,காலின் அக்கர்மான் 29, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 0, பாஸ் டிலீட் 3, சாகிப் சுல்பிகர் 3, லோகன் வான் பீக் 2, ரால்ஃப் வான் டெர் மெர்வி 11, பால் வான் மீகிரன்4 ரன்களில் நடையை கட்டினர். ஆர்யன் தத் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஒரு கட்டத்தில் நெதர்லாந்து அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்து வலுவாகவே இருந்தது. ஆனால் தொடர்ச்சியாக 4 பேட்ஸ்மேன்கள் ரன் அவுட் முறையில் வெளியேறியதால் நெதர்லாந்து அணி சரிவை நோக்கி பயணித்தது. இதனால் மேற்கொண்டு 107 ரன்கள் சேர்ப்பதற்குள் 9 விக்கெட்களையும் கொத்தாக தாரைவார்த்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் மொகமதுநபி 3, நூர் அகமது 2, முஜீப் உர் ரஹ்மான் 1 விக்கெட் கைப்பற்றினர்.

180 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரஹ்மத் ஷா 54 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 10 ரன்களும், இப்ராகிம் ஸத்ரன் 20 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி 64 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 28 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 31ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரில் 4-வது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் அந்த அணி 8 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியதுடன் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது. அதேவேளையில் நெதர்லாந்து 5-வது தோல்வியை சந்தித்தது.

SCROLL FOR NEXT