விளையாட்டு

T20 WC 2024 | நேபாள கிரிக்கெட் அணி தகுதி பெற்றதை கொண்டாடிய ரசிகர்கள்!

செய்திப்பிரிவு

காத்மாண்டு: அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்று விளையாட தகுதி பெற்றுள்ளது நேபாள கிரிக்கெட் அணி. முதல் முறையாக அந்த அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னேறி உள்ளது. இதனை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

காத்மாண்டுவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணி 2-வது அரையிறுதியில் விளையாடியது. இந்தப் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் நேபாளம் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய பிராந்தியத்திற்கான தகுதி சுற்றுப் போட்டியில் நேபாள அணி இறுதிப் போட்டியில் ஓமன் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அதோடு 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட நேபாளம் மற்றும் ஓமன் அணிகள் தேர்வாகி உள்ளன.

அந்த அணியின் பலமே அதன் ரசிகர்கள் தான். நேபாளத்தில் முறையான கிரிக்கெட் மைதான கட்டமைப்பு கூட இல்லாத நிலையில் இந்தப் போட்டியை பார்க்க பெருமளவில் கூடி இருந்தனர். மைதானத்தில் இடம் இல்லாத சூழலில் மைதானத்துக்கு வெளியில் இருந்த சாலை மற்றும் கட்டிடங்களில் இருந்தும் ரசிகர்கள் போட்டியை பார்த்திருந்தனர். அதோடு தங்கள் அணி உலக கோப்பைக்கு தகுதி பெற்றதை ஆரவாரம் செய்து கொண்டாடி தீர்த்தனர்.

2024 டி20 உலகக் கோப்பைக்கு இதுவரை தகுதி பெற்றுள்ள அணிகள்: இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, கனடா, பப்புவா நியூ கினியா, நேபாளம், ஓமன், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த தொடரில் விளையாட உள்ளார். ஆபிரிக்க தகுதி சுற்றில் இருந்து மேலும் 2 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க தகுதி பெற உள்ளன.

SCROLL FOR NEXT