விளையாட்டு

ODI WC 2023 | உலகக் கோப்பையில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகல்: ஆஸி.க்கு பின்னடைவு ஏன்?

செய்திப்பிரிவு

பெங்களூரு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் நாடு திரும்பியிருப்பதால் உலகக் கோப்பை தொடர் முழுவதும் அவர் பங்கேற்க மாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இன்னும் இரண்டு நாட்களில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா எதிர்கொள்ள உள்ளது. ஏற்கெனவே, கோல்ஃப் வண்டியில் இருந்து தவறி விழுந்த காரணத்தால் க்ளென் மேக்ஸ்வெல் சிகிச்சை பெற்றுவருவதால், அவர் அணியில் இடம்பெறாத நிலையில் தற்போது மிட்செல் மார்ஷும் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தொடரின் ஆரம்பத்தில் தோல்விகளால் தடுமாறிய அந்த அணியை மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷும் தங்களது பங்களிப்பால் மீட்டெடுத்தனர். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் மேக்ஸ்வெல் சாதனை சதம் அடிக்க, பெங்களூருவில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் மிட்செல் மார்ஷ் 121 ரன்கள் விளாசினார். இலங்கைக்கு எதிராக அரைசதம் அடித்த அவர், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை 225 ரன்களுடன், இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி பங்களிப்பு செய்திருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் மற்றும் மார்ஷுக்கு பதிலாக அலெக்ஸ் கேரி, சீன் அபோட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரில் யாரேனும் இருவர் இடம்பெறக்கூடும். அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ள ஆஸ்திரேலியா தனது கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் நவம்பர் 4-ம் தேதி இங்கிலாந்தையும், நவம்பர் 11-ம் தேதி வங்கதேசத்தையும் எதிர்கொள்கிறது. இந்த இரண்டிலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT