விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இதுவரை முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், இரண்டாவது இடத்துக்குச் சென்றார். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை 6-7 (7), 6-4, 7-6 (4), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வென்றார்.
இது அவரது 2-வது விம்பிள்டன் பட்டமாகும். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டில் அவர் விம்பிள்டன் சாம்பியன் ஆனார். ஒட்டுமொத்தமாக 7 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அவர் வென்றுள்ளார்.
இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியன் ஆனபோதுதான் ஜோகோவிச் முதல்முறையாக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். இப்போது மீண்டும் விம்பிள்டன் வெற்றி மூலம் முதலிடத்துக்கு வந்துள்ளார். விம்பிள்டன் போட்டியில் காலிறுதியில் தோல்வியடைந்த பிரிட்டனின் ஆண்டி முர்ரே தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்து 10-வது இடத்துக்குச் சென்றுவிட்டார்.
மகளிர் ஒற்றையர் தரவரிசையில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். சீனாவின் லீ நா, ருமேனியாவின் சிமோனா ஹெலப் ஆகியோர் தொடர்ந்து 2,3-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். விம்பிள்டன் மகளிர் பிரிவு சாம்பியன் செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா, இரண்டு இடங்கள் முன்னேறி 4-வது இடத்துக்கு வந்துள்ளார்.