விளையாட்டு

‘‘ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சு பலவீனமானது’’ - ரவி சாஸ்திரியின் பார்வை சரியா?

ஆர்.முத்துக்குமார்

"ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சு குறித்து அனைவரும் ‘ஹைப்’ செய்கின்றனர். அவர் ஒன்றும் வாசிம் அக்ரம் அல்ல. பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பந்து வீச்சு குறித்த பெருமிதங்கள், ஹைப் எல்லாம் உண்மைக்குப் புறம்பானது" என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் விமர்சனம் செய்துள்ளனர். இவர்கள் விமர்சனங்களுக்கு காரணமிருக்கிறது.

இன்ஸ்விங், அவுட்ஸ்விங் யார்க்கர்கள், குட்லெந்தில் பந்தை பிட்ச் செய்வது என்று பல வித்தைகளை ஆரம்ப கட்டத்தில் ஷாஹின் அஃப்ரிடி கையில் வைத்திருந்தார். இப்போதும் வைத்திருக்கிறார். ஆனால் அவை தற்போது வேலை செய்யவில்லை. இந்த உலகக் கோப்பையிலும் சரி அதற்கு முந்தைய ஆசியக் கோப்பையிலும் சரி (இந்தியாவுக்கு எதிரான மழையால் நோ-ரிசல்ட் ஆன போட்டி தவிர) ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சின் கூர்மை முனை மழுங்கியதாகத் தெரிகிறது.

ஒன்று அவர் தனது இன்ஸ்விங் யார்க்கர் போன்ற பந்துகளை ஓரு ஆயுதமாக, கடைசி உபகரணமாக எடுக்காமல் அதிகம் பயன்படுத்தி விடுகிறாரோ என்ற ஐயமும் எழுகிறது. அல்லது அவரிடம் இந்த இன்ஸ்விங் யார்க்கர் தவிர வேறு ஒன்றும் உருப்படியாக இல்லையா என்ற சந்தேகமும் எழுகிறது. புள்ளி விவரங்கள் அஃப்ரிடிக்குச் சாதகமாக இருந்தாலும் அவர் பந்து வீச்சிலிருந்து ஏதோ ஒன்று அவரிடமிருந்து குறைகிறது என்ற உணர்வையே ஏற்படுத்துகிறது.

அவர் வீசும் பந்துகள், குறிப்பாக விக்கெட்டுகளை வீழ்த்தும் இன்ஸ்விங்கர், இன்ஸ்விங்கிங் ஃபுல் லெந்த் டெலிவரிகள், யார்க்கர்கள் போன்றவை துல்லியம் மிக்கவையாக இருக்க வேண்டும். அவர் காயத்திலிருந்து மீண்டு வந்திருப்பதால் போதுமான பயிற்சி இல்லாமல் அந்தத் துல்லியம் போய்விட்ட மாதிரி தெரிகிறது. இதனால் அவரின் பலமாக சொல்லப்படும் இந்த இன்ஸ்விங் பந்துகள் துல்லியம் இல்லாமல் பேட்ஸ்மேன்களிடம் சாத்துவாங்க வழிவகுக்கிறது.

இப்போதெல்லாம் அவரது பந்துகள் சற்றே லெக் திசை நோக்கியே வீசப்படுகிறது. லெந்த்தும் மிகவும் ஃபுல் லெந்த் ஆக உள்ளது. முக்கியமாக ஷாஹின் அஃப்ரிடி பந்தின் வேகம் குறைந்துள்ளது என்றே தெரிகிறது. இதனால் அவரின் பந்துகளை இப்போதெல்லாம் அடிக்கத் தொடங்குகிறார்கள். ஏனெனில் அவரது பலம், பலவீனமாகி அவர் வீசும் பந்துகள் எப்படி வரும் என்பதை முன் கூட்டியே கணித்து விடுகின்றனர்.

இந்தியாவில் ரோஜர் பின்னியின் ஸ்விங், ஆஸ்திரேலிய லெஜண்ட் ஆலன் பார்டரையே பதம் பார்த்துள்ளது. பாகிஸ்தானிய லெஜண்ட் மாஜித் கான், ஜாகீர் அப்பாஸ், சாதிக் முகமது போன்றோரையும் பதம் பார்த்துள்ளது. அதாவது அவரால் லெக் அண்ட் மிடில் ஸ்டம்பில் பந்தை பிட்ச் செய்து அவுட் ஸ்விங்கர் செய்ய முடியும். சில வேளைகளில் இந்தப் பந்தை அவர் அதிகமாக போட முயற்சி செய்து லெக் திசையில் சாத்து வாங்கியதைப் பார்த்திருக்கிறோம். பின்னியின் மேஜிக் பந்து அவரை இப்படிச் செய்தது போல் ஷாஹின் அஃப்ரிடியின் மேஜிக் பந்து அவரையும் அதை நம்பியே இருக்குமாறு, அதிகமாக அதைப் பயன்படுத்துமாறுச் செய்து, அதனால் இன்று அவர் அச்சமூட்டாத ஒருபவுலராகவே இருக்கிறார்.

மேலும், இப்போது முதல் 10 ஓவர்களில் அதிக ஃபுல்டாஸ்களையும் வீசுகிறார். இன்னொரு ஆச்சரியம் கலந்த புள்ளி விவரம் என்னவெனில், ஆசியக் கோப்பையில் அவர் மணிக்கு 135 கிமீ வேகம் வீசினார் என்றால் நடப்பு உலகக் கோப்பையில் 133 கிமீ வேகம் தொடுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. வேகமாக வீச காயம் காரணமாக பயப்படுவது போல் தெரிகிறது. தனது மேஜிக் பந்தைவீச வேண்டும் என்பதற்காக அவரது உயர சாதகத்தை மறந்து அதிகம் குனிந்து வீசுவது போல் தெரிகிறது. பந்தை வீசும் தருவாயில் அவரது தலை நேராக இல்லாமல் பக்கவாட்டில் சாய்வதாக உள்ளது. இதனால் வேகம், ஸ்விங் ஆகியவை எளிதில் பேட்ஸ்மேன்களால் கையாளக்கூடியதாக உள்ளது.

ஷாஹின் அஃப்ரிடியின் வயது 23 தான். பெரிய பெரிய வேகப்பந்து வீச்சு லெஜண்ட்களைக் கொண்டது பாகிஸ்தான் அணி. அவர்களிடம் யோசனை பெற்று ஷாஹின் அஃப்ரிடி மீண்டும் ஓர் அச்சுறுத்தல் பவுலராக மாறுவார், இன்னும் சிறப்பாக மாறுவார் என்று பாகிஸ்தான் முகாமில் நம்பப்படுகிறது. அப்படி முழு பார்மில் உள்ள ஒருவராக, முழு தன்னம்பிக்கையுடன் வீசும் ஒருவராக ஷாஹின் அஃப்ரிடி திரும்பும்பட்சத்தில் உண்மையில் இந்திய அணிக்கு மட்டுமல்ல மற்ற அணிகளுக்கும் அவர் ஓர் அச்சுறுத்தல்தான்.

SCROLL FOR NEXT