புதுடெல்லி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டுள்ளது. இதில் ரோஹித் சர்மா 719 புள்ளிகள் பெற்று 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இடத்தில் பாபர் அஸமும் (பாகிஸ்தான்), 2-வது இடத்தில் ஷுப்மன் கில்லும் (இந்தியா), 3-வது இடத்தில் குயின்டன் டி காக்கும் (தென் ஆப்பிரிக்கா) உள்ளனர். இந்திய வீரர் விராட் கோலி 711 புள்ளிகளுடன் 8-வது இடத்தை, டேவிட் மலானுடன் (இங்கிலாந்து) பகிர்ந்து கொண்டுள்ளார்.