விளையாட்டு

“என்னை அணைத்தது ஆப்கன் சிறுவன் அல்ல, இந்தியர்!” - முஜீப் நெகிழ்ச்சி | ODI WC 2023

செய்திப்பிரிவு

புதுடெல்லி: புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஆப்கன் அணி. உலகக் கோப்பை வரலாற்றில் அந்த அணி பதிவு செய்துள்ள இரண்டாவது வெற்றி இது. இந்தப் போட்டியில் 285 ரன்களை சேஸ் செய்த இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார் ஆப்கன் கிரிக்கெட் அணியின் வீரர் முஜீப் உர் ரஹ்மான். இந்தப் போட்டியில் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். அதேபோல 10 ஓவர்கள் 3 விக்கெட்களை அவர் கைப்பற்றி இருந்தார். அதன் காரணமாக அவர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இப்போட்டி முடிந்த பின் முஜீப் உர் ரஹ்மானை ஒரு சிறுவன் அரவணைத்து அழுத வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. வலைதளவாசிகள் பலரும் அச்சிறுவன் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் எனக் கூறிவந்தனர். இந்நிலையில், அச்சிறுவன் யார் என்பதை முஜீப் உர் ரஹ்மான் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

"அச்சிறுவன் ஆப்கன் கிடையாது. அவன் ஒரு இந்திய சிறுவன். எங்களின் வெற்றிக்கு அச்சிறுவன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். அந்தக் குட்டி பையனை டெல்லியில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல அது ஓர் உணர்வு.

டெல்லியில் எங்களுக்கு ஆதரவளித்த அற்புதமான ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. அவர்கள் வெளிப்படுத்திய அன்பும் ஆதரவும் மகத்தானது. ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அன்புக்கு நன்றி டெல்லி" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT