20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்குகிறது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளைச் சேர்ந்த 71 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அடுத்த மிகப்பெரிய போட்டியாகும்.
11 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியைப் பொறுத்தவரையில் முதலிடத்தைப் பிடிப்பதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1990 முதல் தொடர்ச்சியாக பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து வரும் ஆஸ்திரேலியா இந்த முறையும் அவ்வளவு எளிதாக அந்த இடத்தை விட்டுக்கொடுக்காது. ஆனாலும் ஸ்காட்லாந்தில் நடக்கும் இந்தப் போட்டியில் கோலோச்ச இங்கிலாந்தும் தீவிரம் காட்டும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் தலா 400 வீரர்களுடன் களமிறங்குகின்றன.
3-வது இடத்துக்கு இந்தியா போட்டி
இந்தியாவுக்கும், 265 பேருடன் களமிறங்கும் கனடாவுக்கும் இடையில் 3-வது இடத்தைப் பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை 101 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்த இந்தியா சார்பில் இந்த முறை 215 வீரர், வீராங்கனைகள் 14 பிரிவுகளில் பங்கேற்கின்றனர். கடந்த முறை துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்த போட்டிகளில் இந்தியா பதக்கங்களைக் குவித்த சில பிரிவுகள் நீக்கப்பட்டுவிட்டன.
இது இந்தியாவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதேபோல் கடந்த முறை வில்வித்தை மற்றும் டென்னிஸில் இந்தியா 12 பதக்கங்களை அள்ளியது. ஆனால் இந்த முறை அந்த இரு போட்டிகளும் இடம்பெறவில்லை. துப்பாக்கி சுடுதலைப் பொறுத்தவரை கடந்த முறை 30 பதக்கங்கள் கிடைத்தன. இந்த முறை சில பிரிவுகள் நீக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தியா 60 பதக்கங்களை வென்றாலே அது சாதனையாக அமையும் என தெரிகிறது.
மல்யுத்தத்தில் 10 பதக்கம்
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் 71 அணிகளின் மொத்த மக்கள் தொகையில் (சுமார் 200 கோடி) பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட இந்திய அணியில் தற்போது இடம்பெற்றுள்ள வீரர்களில் 30 பேர் கடந்த காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்கள்.
அபிநவ் பிந்த்ரா, ககன் நரங், விஜேந்தர் சிங், சுஷில் குமார், யோகேஷ்வர் தத், கிருஷ்ணா பூனியா, ஆசிஷ் குமார், சரத் கமல் உள்ளிட்டோர் இந்த முறையும் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மல்யுத்தத்தில் சில வகையான போட்டிகள் நீக்கப்பட்டுவிட்டாலும்கூட, குறைந்தபட்சம் இந்தியா 10 பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
இந்திய மக்களின் ரத்தத்தில் கலந்துபோன ஹாக்கியில் நிச்சயம் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுமாறிய தடகளம்
தடகளப் போட்டிகளைப் பொறுத்தவரையில் கடந்த முறை 2 தங்கம் உள்பட 12 பதக்கங்களை வென்ற இந்திய அணி இந்த முறை மிகக்குறைவான அளவிலேயே பதக்கம் வெல்லும் என தெரிகிறது. காமன்வெல்த் போட்டிக்கு போதிய அளவுக்கு தயாராகாததும், பலர் பார்மில் இல்லாததுமே அதற்குக் காரணம்.
எனவே தடகளத்தில் 4 அல்லது 5 பதக்கங்கள் மட்டுமே கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணா பூனியா (மகளிர் வட்டு எறிதல்), விகாஸ் கௌடா (ஆடவர் வட்டு எறிதல்), அரவிந்தர் சிங் (ஆடவர் மும்முறைத் தாண்டுதல்) ஆகியோர் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளது.
மகளிர் 4x100 மீ. தொடர் ஓட்டம், பாட்மிண்டன் ஆகியவற்றிலும் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்புள்ளது. பாட்மிண்டனைப் பொறுத்தவரையில் காயம் காரணமாக சாய்னா நெவால் விலகிவிட்டார். எனினும் மற்றொரு முன்னணி வீராங்கனையான சிந்து தங்கம் வெல்ல வாய்ப்புள்ளது. ஆடவர் பிரிவு பாட்மிண்டனில் காஷ்யப், குருசாய் தத் ஆகியோரும், மகளிர் இரட்டையர் பிரிவில் ஜுவாலா-அஸ்வினி ஜோடியும் பதக்க வெல்ல வாய்ப்புள்ளது. இதேபோல் குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக், பளுதூக்குதல் ஆகியவற்றிலும் இந்தியாவுக்கு கணிசமான வாய்ப்புள்ளது.
உசேன் போல்ட்
இதைத்தவிர உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரரான உசேன் போல்ட், மோ ஃபரா உள்ளிட்டோரும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ளனர். ஒலிம்பிக்கில் 6 தங்கம், உலக சாம்பியன்ஷிப்பில் 8 தங்கம் வென்றிருக்கும் உசேன் போல்ட், காயம் காரணமாக இந்த முறை 4x100 மீ. தொடர் ஓட்டத்தில் மட்டுமே பங்கேற்கவிருக்கிறார்.
தொடக்க விழா
காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழா கிளாஸ்கோவில் உள்ள செல்டிக் பூங்காவில் நடைபெறுகிறது. பிரிட்டன் ராணி 2-வது எலிசபெத் போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.
தொடக்க விழாவை ஜேக் மோர்டான் நிறுவனம் நடத்துகிறது. 2002, 2006 காமன்வெல்த் போட்டி, ஏதென்ஸ் ஒலிம்பிக், 2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆகியவற்றை பிரம்மாண்டமாக நடத்திய ஜேக் மோர்டான் நிறுவனம், இந்த முறையும் உலக ரசிகர்களுக்கு விருந்தளிக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 2,000 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இந்த தொடக்க விழா நிகழ்ச்சியை உலகம் முழுவதிலும் இருந்து 100 கோடி பேர் கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமி விருது வென்றவரான ராட் ஸ்டீவார்ட், சூசன் பாயல், ஆமி மெக்டொனால்ட், ஜூலி பௌலிஸ் உள்ளிட்ட பாப் பாடகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
நிகழ்ச்சியை ரசிகர்கள் கண்டுகளிப்பதற்கு வசதியாக 100 மீ. அகலமும், 11 மீ. உயரமும் கொண்ட பிரம்மாண்ட எல்இடி திரை செல்டிக் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.முதல் நாளில் போட்டிகள் எதுவும் கிடையாது. நாளை முதல் பதக்க வேட்டை ஆரம்பமாகவுள்ளது.