விளையாட்டு

விருதுநகரில் ஜூலை 25 முதல் சர்வதேச செஸ் போட்டி

செய்திப்பிரிவு

விருதுநகரில் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகள் இம்மாதம் 25-ம் தேதி முதல் நடைபெறுகின்றன. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட சதுரங்கக் கழக செயலர் சசிதரன், தலைவர் கோபால்சாமி, நிர்வாகி ராஜசேகர், பன்னாட்டு செஸ் கழக நடுவர் சங்க உதவிச் செயலர் அனந்தராமன் ஆகியோர் திங்கள்கிழமை விருதுநகரில் அளித்த பேட்டி:

விருதுநகர் சதுரங்கக் கழகம் சார்பில் நடத்தப்படும் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகள் விருதுநகரிலுள்ள எஸ்.எஸ்.கே. சரஸ்வதி மகாலில் ஜூலை 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படவுள்ளது. மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படவுள்ளன. சர்வதேச சதுரங்கக் கழகத்தால் வெளியிடப்பட்டும் ரேட்டிங்கில் உள்ள தர வரிசைப் பட்டியலின்படி போட்டிகள் நடத்தப்படும்.

இதில், கிராண்ட் மாஸ்டர் ஒருவரும், 13 சர்வதேச மாஸ்டர்களும் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளனர். அமெரிக்காவிலிருந்து ஒரு வீரரும், ஜப்பானிலிருந்து இரு வீரர்களும் பங்கேற்கின்றனர். மேலும் பலர் பங்கேற்க உள்ளனர்.

இதுவரை 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 162 பேர் சர்வதேச சதுரங்க தரப் பட்டியலில் இடம்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மாநில சதுரங்க சாம்பியன் பி.மகேஸ்வரனும் இப்போட்டியில் பங்கேற்கிறார்.

நம்நாட்டில் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், புதுவை, டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 63 போட்டியாளர்களும் பங்கேற்கின்றனர். ஹட்சன், இதயம் போன்ற நிறுவனங்கள் இப்போட்டிகளை நடத்த உதவுகின்றன. போட்டிகள் நடைபெறுவதை இந்நிறுவனங்களின் இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கென தனி போட்டியும், 10 வயதுக்கு உட்பட்ட சிறுமியர், 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான போட்டிகளும், ஆண்களுக்கு 8, 10, 12, 15, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளிலும், பார்வைக் குறைபாடு உடையோருக்கான போட்டியும் நடத்தப்படும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 பரிசுகளும், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீரர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும். மேலும், தொடக்க விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் போட்டிகளைத் தொடங்கி வைக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT