விளையாட்டு

போர்ப்ஸ் பணக்கார அணிகள் பட்டியலில் ரியல் மாட்ரிட்டுக்கு முதலிடம்

செய்திப்பிரிவு

சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ஸ்பெயின் அணி முதல் சுற்றோடு வெளியேறியது. ஆனால் அந்நாட்டை சேர்ந்த ரியல் மாட்ரிட், பார்சிலோனா ஆகிய இரு கால்பந்து கிளப்புகளும் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பணக்கார அணிகளின் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன.

கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வரும் ரியல் மாட்ரிட் அணி தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அந்த அணியின் மதிப்பு ரூ.20,640 கோடியாகும். அதற்கு அடுத்தபடியாக லயோனல் மெஸ்ஸி, நெய்மர் ஆகிய இருவரும் விளையாடி வரும் பார்சிலோனா கிளப் ரூ.19,240 கோடியுடன் 2-வது இடத்தில் உள்ளது. 3-வது இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மதிப்பு ரூ.16,898 கோடியாகும்.

பணக்கார விளையாட்டு அணிகளின் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் மற்றொரு கால்பந்து கிளப் அணி, ஜெர்மனி லீக் சாம்பியனான பேயர்ன் மூனிச் ஆகும். 7-வது இடத்தைப் பிடித்திருக்கும் அந்த அணியின் தற்போதைய மதிப்பு ரூ.11,125 கோடியாகும்.

போர்ப்ஸ் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் எஞ்சிய அணிகள் அனைத்தும் மேஜர் லீக் பேஸ்பால் மற்றும் தேசிய கால்பந்து லீக் ஆகியவற்றைச் சேர்ந்த அணிகள்தான். நியூயார்க் யாங்கிஸ் அணி ரூ.12,928 கோடியுடன் 4-வது இடத்திலும், டாலாஸ் கௌபாய்ஸ் அணி ரூ.15,035 கோடியுடன் 5-வது இடத்திலும் உள்ளன.

இந்த ஆண்டில் 30 அணிகள் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதல் 50 இடங்களுக்குள் வந்துள்ளன. அவற்றில் 60 சதவீத அணிகள் தேசிய லீக் கால்பந்து போட்டிகளைச் சேர்ந்த அணிகள்.

SCROLL FOR NEXT