இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான இன்று உணவு இடைவேளைக்குப் பிறகு இஷாந்த் சர்மா அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இங்கிலாந்து அணி தன் முதல் இன்னிங்ஸில் 60 வது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் என்று திணறி வருகிறது.
142 பந்துகளைச் சந்தித்து 8 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்த துவக்க வீரர் சாம் ராப்சன், சற்று முன் இஷாந்த் சர்மாவின் பந்து ஒன்று இன்ஸ்விங் ஆகி உள்ளே வர கிரீசில் நின்றபடி அவர் கால்காப்பில் வாங்கியதாக முறையீடு செய்ய நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் பந்து லேசாக மட்டையின் உள்விளிம்பில் பட்டதுபோல் தெரிந்தது. அது மட்டைதான் என்பதும் உறுதியாகக் கூறமுடியவில்லை காரணம் பேட் பின்னங்கால் பேடில் பட்டிருக்கலாம் என்ற சாத்தியம் அதிகமாக இருந்தது.
ரிவியூ இருந்திருந்தால் அவுட் உறுதியாகத் தெரிந்திருக்கும். இப்போது ராப்சனுக்கு சற்று சந்தேகம் இருந்தது உண்மைதான்.
அடுத்ததாக நன்றாக ஆடி வந்த கேரி பேலன்ஸ் (71) இஷாந்த் பந்து உள்ளே வருகிறதா வெளியே செல்கிறதா என்பதைக் கணிப்பதில் தவறு செய்தார், சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய லெந்த்தில் வீசினார் இஷாந்த் சர்மா பந்து கால்காப்பில் பட்டது நடுவர் கையை உயர்த்தினார்.
சற்று முன் 6 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து ஆடி வந்த இயன் பெல், இஷாந்த் சர்மா வீசிய ஆஃப் ஸ்டம்ப் ஷாட் பிட்ச் பந்தை தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். என்ன ஷாட் ஆடுவது என்ற தடுமாற்றத்தினால் அவர் அவுட் ஆனார்.
இன்று காலை இந்திய பந்து வீச்சாளர்களான புவனேஷ், மொகமது ஷமி ஆகியோர் ஃபுல் லெந்த்தில் வீசினர். எல்லா பந்துகளையும் பேட்ஸ்மென்கள் ஆட வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்தப் பிட்சைப் பொறுத்தவரை இது நல்ல அணுகுமுறை. ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசியதால் இங்கிலாந்து சுதந்திரமாக ரன்களை எடுக்க முடியவில்லை.
மொகமது ஷமி 3 முறை தவறாக லெக் ஸ்டம்பில் வீச மூன்றும் பவுண்டரி ஆனது. மற்றபடி ரன்களுக்கு இங்கிலாந்து போராடி வருகிறது. ரவீந்திர ஜடேஜா அருமையாக வீசினார் அவர் 13வது ஓவரை வீசி வந்தபோது 17 ரன்களையே விட்டுக் கொடுத்திருந்தார். பந்துகள் திரும்பும் போல்தான் தெரிகிறது.
தோனி தொடர்ந்து பவுலர்களிடம் பேசி வருகிறார். முன்னைவிட தோனி ஒரு ஈடுபாட்டுடன் செயல்படுவது தெரிகிறது.
தற்போது ஜோ ரூட் 2 ரன்களுடனும், மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமலும் விளையாடி வருகின்றனர்.