தரம்சாலா: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து தனது 2வது லீக் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதேவேளையில் வங்கதேச அணியானது தனதுமுதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. நடப்புசாம்பியனான இங்கிலாந்து தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கான வழிகளை கண்டறியக்கூடும்.
நியூஸிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 283 ரன்களை இலக்காக கொடுத்தது. ஆனால் இந்த இலக்கை நியூஸிலாந்து அணி 37 ஓவர்களிலேயே எட்டி இங்கிலாந்துஅணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்துபேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்திய நிலையில் இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர்களான கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட், சேம் கரண் ஆகியோரால்272 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கான்வே, ரச்சின் ரவீந்திரா கூட்டணியை கடைசிவரை பிரிக்க முடியாமல் போனது.
பேட்டிங்கில் முன்னான் கேப்டன் ஜோ ரூட், ஜானிபேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர் ஆகியோர் சில பயனுள்ள பங்களிப்புகளை வழங்கிய போதிலும் அவை போதுமானதாக இல்லாததால் இங்கிலாந்து அணிதோல்வியை சந்திக்க நேரிட்டது.இதனால் இன்றைய ஆட்டத்தில்அனைத்து துறையிலும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் இங்கிலாந்து அணி தீவிரம் காட்டக்கூடும்.
ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி தனதுமுதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. அந்த ஆட்டத்தில் ஆல்ரவுண்டராக மெஹிதிஹசன் சிறப்பாக செயல்பட்டிருந்தார். பந்து வீச்சில் 3 விக்கெட்களை வீழ்த்திய அவர், பேட்டிங்கில் 57 ரன்கள் சேர்த்திருந்தார். நஜ்முல் ஹோசைன் ஷான்டோவும் அரை சதம் அடித்திருந்தார். இவர்களுடன் ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், முஸ்பிகுர் ரகிம் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர்.