புதுடெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் மோதுகின்றன.
உலகக் கோப்பை போட்டியில் இந்த முறை தெம்பா பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி களம் காண்கிறது. குயின்டடன் டி காக், எய்டன் மார்க்ரம், ஹெய்ன்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், ரீசா ஹென்றிக்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். இவர்கள் உயர்மட்டத் திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் இலங்கை அணியை எளிதில் வீழ்த்தக்கூடும்.
அதேபோல் பந்து வீச்சில் மார்க்கோ யான்சென், காகிகோ ரபாடா, லுங்கி நிகிடி, கேசவ் மகராஜ், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் வலுவான பந்துவீச்சு குழுவாக அமைந்துள்ளனர். இவர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் அச்சுறுத்தலைத் தரக்கூடும்.
அதே நேரத்தில் காயம் காரணமாக முக்கிய வீரர்கள் இலங்கை அணியில் இடம்பெறவில்லை. தசன் ஷனகா தலைமையில் பதும் நிசங்கா, திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா, சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா ஆகியோர் முழுத் திறனை வெளிப்படுத்தும்பட்சத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு சவால் அளிக்கலாம். பந்துவீச்சில் மதீஷா பதிரனா, லஹிரு குமாரா, துஷன் ஹேமந்தா, துனித் வெல்லலகே எதிரணியை மிரட்டக் காத்திருக்கின்றனர்.