ரச்சின் ரவீந்திரா மற்றும் கான்வே 
விளையாட்டு

ODI WC 2023 | நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸி.

செய்திப்பிரிவு

அகமதாபாத்: 13-வது ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, நியூஸிலாந்துடன் மோதியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது.

கேன் வில்லியம்சன் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதனால் டாம் லேதம் அணியை வழிநடத்தினார். முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 86 பந்துகளை சந்தித்து ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் ரிவர்ஸ் ஸ்வீப்ஷாட் விளையாட முயன்று கிளென்பிலிப்ஸ் பந்தில் போல்டானார். கேப்டன் ஜாஸ் பட்லர் 42 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்த நிலையில் மேட் ஹென்றி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஜானி பேர்ஸ்டோ 33, டேவிட் மலான் 14, ஹாரி புரூக் 25, மொயின்அலி 11, லியாம் லிவிங்ஸ்டன் 20, சேம் கரண் 14, கிறிஸ் வோக்ஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். மார்க்வுட் 13, ஆதில் ரஷீத் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தி அழுத்தம் கொடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களால் ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறையை கடைபிடிக்க முடியவில்லை.

பந்து வீச்சில் மேட்ஹென்றி 3 விக்கெட்களையும் மிட்செல் சாண்ட்னர், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 283 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி தொடக்கத்திலேயேஅதிரடி காட்டியது. முதல் ஓவரில் டேவன் கான்வே 10 ரன்கள் விளாசிய நிலையில் அடுத்த ஓவரின் முதல் பந்தில் வில் யங் (0) ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய 23 வயதான ரச்சின் ரவீந்திரா, கான்வேயுடன் இணைந்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை கடும் சிதைவுக்கு உட்படுத்தினார்.

இந்த ஜோடி மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டியது. அதிரடியாக விளையாடிய டேவன் கான்வே 83 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் தனது 5-வது சதத்தை விளாசினார். அவருக்கு உறுதுணையாக மட்டையை சுழற்றிய ரச்சின் ரவீந்திரா 82 பந்துகளில், 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் தனது முதல் சதத்தை அடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் இளம் வயதில் சதம் விளாசிய நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையை அவர், பெற்றார்.

டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா அதிரடியால் நியூஸிலாந்து அணி 82 பந்துகளை மீதம் வைத்து 36.2 ஓவர்களிலேயே மேற்கொண்டு விக்கெட்டை இழக்காமல் 283 ரன்களை எடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவன் கான்வே 121 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 152 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 96 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 123 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 273 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து அணியின் இந்த வெற்றியானது கடந்த உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்திருந்தது.

விரைவாக ஆயிரம் ரன்கள்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விரைவாக ஆயிரம் ரன்களை எட்டிய நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையை டேவன் கான்வே படைத்துள்ளார். இந்த மைல் கல் சாதனையை அவர், 22 ஆட்டங்களில் நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன்னர் கிளென் டர்னர் 24 ஆட்டங்களில் 1,000 ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது.

3-வது இளம் வீரர்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதன் முறையாக களம் இறங்கி சதம் விளாசிய இளம் வீரர்களின் பட்டியலில் நியூஸிலாந்தின் ரச்சின் ரவீந்திரா 3-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசிய அவருக்கு 23 வயது, 321 நாட்கள் ஆகிறது. இந்த வகை சாதனையில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அவர், 2011-ம்ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 22 வயது 106 நாட்களில் சதம் அடித்திருந்தார்.

அதிக வயதில் சதம்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதன் முறையாக களம் இறங்கி அதிக வயதில் சதம் விளாசியவர்களின் பட்டியலில் நியூஸிலாந்தின் டேவன் கான்வே 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு 32 வயது 89 நாட்கள் ஆகிறது. இந்த வகை சாதனையில் அயர்லாந்தின் ஜெர்மி பிரே முதலிடத்தில் உள்ளார். அவர், 2007-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தனது 33 வயது 105 நாட்களில் சதம் அடித்திருந்தார்.

வெற்றி பெற்றது எப்படி?

  • கேன் வில்லியம்சன், டிம் சவுதி காயம் காரணமாக களமிறங்கவில்லை.
  • கடைசி நிமிடத்தில் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன், அசவுகரியமாக உணர்ந்ததால் களமிறக்கப்படவில்லை. இதனால் ரச்சின் ரவீந்திராவை தயாராக இருக்குமாறு அணி நிர்வாகம் கூறி உள்ளது.
  • பந்து வீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என கணித்த டாம் லேதம் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் டிரெண்ட் போல்ட்டிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல்திறன் வெளிப்படவில்லை. இருப்பினும் மேட் ஹென்றி சிறந்த நீளத்தில் பந்துகளை வீசி டேவிட் மலானை வீழ்த்தி திருப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார். அதேவேளையில் சாண்ட்னர், பேர்ஸ்டோவை வெளியேற்றினார்.
  • இதன் பின்னர் ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், ஹென்றி, டிரெண்ட் போல்ட் ஆகியோரை சுழற்சி முறையில் அற்புதமாக பயன்படுத்தி இங்கிலாந்து அணியின் பார்னட்ர்ஷிப்பை சீரான இடைவெளியில் தகர்த்தார் கேப்டன் டாம் லேதம்.
  • இங்கிலாந்து அணி வீரர்கள் பெரும்பாலும் மோசமான ஷாட்களை மேற்கொண்டே விக்கெட்களை தாரை வார்த்தனர். 320 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டிய நிலையில் இருந்து கடைசியில் 282 ரன்களை சேர்த்தனர்.
  • இலக்கை துரத்திய நியூஸிலாந்து எந்த ஒரு கட்டத்திலும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கவில்லை. கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோரது அதிரடியில் 2.149 நெட் ரன் ரேட்டில் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது நியூஸிலாந்து அணி.
SCROLL FOR NEXT