சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் வரும் 8-ம் தேதி சென்னையில் மோதுகிறது. இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:
இந்தியாவில் ஒருநாள் போட்டிகளில் எங்கள் பேட்ஸ்மேன்கள் அதிகம் விளையாடி உள்ளனர். எனவே பெரும்பாலான இந்திய பந்துவீச்சாளர்களை அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்களுக்கு எதிராக திட்டங்கள் வைத்துள்ளனர். இதனால் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். வார்னரிடம் இருந்து சிறந்த செயல் திறனை எதிர்பார்க்கிறேன்.
ஆடம் ஸம்பாவுக்கு உறுதுணையாக கிளென் மேக்ஸ்வெல் 10 ஓவர்களை வீசும் திறன் கொண்டவர். அவர், பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாவிட்டால் பந்து வீச்சில் பங்களிப்பை கொடுக்கக்கூடியவர். உலகக் கோப்பை தொடரில் மேக்ஸ்வெல் ஆக்கப்பூர்வமானவராக இருப்பார்.
ஐசிசி தொடர்களில் எனக்கு விருப்பமானது டெஸ்ட் சாம்பியன்ஷிப்தான். ஆனால், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை என்பது 4 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் நிகழ்வு ஆகும்.மேலும் இந்த தொடர் 50 வருட வரலாற்றை கொண்டுள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணிவலுவானது. இங்கிலாந்து நடப்பு சாம்பியனாக இருக்கிறது. நியூஸிலாந்து அணி ஐசிசி தொடர்களின் இறுதிப்போட்டிகளில் இருந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளும் வலுவாக உள்ளன. இதனால் அரை இறுதிக்கு முன்னேறும் 4 அணிகளுக்கும் இந்த தொடர் கடினமாகவே இருக்கும்.
பாதகம் ஏற்படுத்தக்கூடிய அணியாக ஆப்கானிஸ்தான் இருக்கக்கூடும். ஏனெனில் வலுவானஅணிகளுள் ஒன்றாக அவர்கள், பேசப்படுகிறார்கள். அவர்களுக்கு சில உயர்தர சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர், அவர்கள் சிறந்த அளவில் ரன்களை எடுத்துள்ளனர். இவ்வாறு பாட் கம்மின்ஸ் கூறினார்.