கோப்புப்படம் 
விளையாட்டு

உலகக் கோப்பை நினைவுகள் | 2007-ல் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா: ஏமாற்றிய இந்திய அணி

பெ.மாரிமுத்து

2007-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முதன்முறையாக மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்றது. இதில் 16 அணிகள் பங்கேற்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா- இலங்கை மோதின. ஆடம் கில்கிறிஸ்ட் 104 பந்துகளில் விளாசிய 149 ரன்கள் உதவியுடன் 282 ரன்கள் இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. மழை குறுக்கீடு காரணமாக இலங்கை அணிக்கு 36 ஓவர்களில் 269 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணியால் 8 விக்கெட்கள் இழப்புக்கு 215 ரன்களே எடுக்க முடிந்தது.

இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக மகுடம் சூடியது. அந்த அணி 1999, 2003-ம் ஆண்டு பட்டம் வென்றிருந்தது. ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா கைப்பற்றிய 4-வது உலகக் கோப்பையாக இது அமைந்தது. 1987-ம் ஆண்டும் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றிருந்தது.

ஏமாற்றிய இந்திய அணி: 2007 உலகக் கோப்பையில் இந்திய அணி சச்சின் டெண்டுலகர், சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவக், ராபின் உத்தப்பா, ராகுல் திராவிட், யுவராஜ் சிங், எம்.எஸ்.தோனி என வலுவான பேட்டிங் படையுடன் களமிறங்கியது. கோப்பையை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

2-வது ஆட்டத்தில் பலம் குறைந்த பெர்முடாவுக்கு எதிராக இந்திய 413 ரன்களை வேட்டையாடியது.

257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் கண்டது. ஆனால் கடைசி ஆட்டத்தில் 255 ரன்கள் இலக்கை விரட்ட முடியாமல் 69 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வி அடைந்து லீக் சுற்றுடன் வெளியேறியது ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய அணி. பேட்டிங் வரிசை மாற்றம், பயிற்சியாளர் கிரேக் சாப்பலின் திட்டங்கள் அணியை வெகுவாக பாதித்தது.

SCROLL FOR NEXT