ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான வாலிபால் போட்டியில் இந்திய அணி, கம்போடியாவை வீழ்த்தியது.
சீனாவின் ஹாங்சோ நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 25-14, 25-13, 25-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள தென் கொரியாவுடன் இன்று மோதுகிறது.
இந்த தொடரில் வாலிபால் போட்டியில் மொத்தம் 19 அணிகள் கலந்து கொண்டுள்ளன. ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய அணிகள் பலம் வாய்ந்தவையாக உள்ளன. ஜப்பான் 16 தங்கமும், சீனா 11 தங்கமும், கொரியா 5 தங்கம் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி அதிகபட்சமாக கடந்த 1962-ம் ஆண்டு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது. அதேவேளையில் 1958 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றி இருந்தது.