ஜடேஜாவைத் தள்ளி விட்டதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது இந்திய அணி நிர்வாகம் அளித்த புகாரின் மீதான விசாரணை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற முதற்கட்ட விசாரணையின் போது, ஆண்டர்சன் பிரதிநிதியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் பிசிசிஐ வழக்கறிஞர்கள், ஐசிசி ஒழுக்கமுறைமை வழக்கறிஞர் ஆகியோர் கலந்து கொண்டனர். விசாரணையின் முடிவில் நீதித்துறை ஆணையர் கார்டன் லூயிஸ் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு விசாரணையைத் தள்ளிவைத்தார்.
3வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரவீந்திர ஜடேஜா மீதான புகார் குறித்த விசாரணையை ஆட்ட நடுவர் டேவிட் பூன் நடத்தவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விசாரணைக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.
முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் உணவு இடைவேளையின் போது ஆண்டர்சன், ஜடேஜா இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அப்போது ஆண்டர்சன், ஜடேஜாவைத் தள்ளிவிட்டதாகவும் புகார் எழுந்தது.
ஆண்டர்சன் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் அவருக்குக் குறைந்தது 2 டெஸ்ட் போட்டிகள் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக ஜடேஜா தவறு செய்திருந்தது நிரூபணம் ஆனால் அவரது சம்பளத்தில் 50% அல்லது 100% அபராதமாக விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.