கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை பேட்ஸ்மேனான ஸ்ரேயஸ் ஐயர் முதுகு பிடிப்பில் இருந்து குணமடையாததால் ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்திலும் களமிறங்கவில்லை.
முதுகுவலி காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஸ்ரேயஸ் ஐயர் கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் களமிறங்கினார். லீக் சுற்றில் மழையால் பாதிக்கப்பட்ட இரு ஆட்டங்களிலும் அவர், விளையாடி இருந்த நிலையில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கவில்லை. முதுகுபிடிப்பு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரேயஸ் ஐயருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ஸ்ரேயஸ் ஐயர் களமிறக்கப்படவில்லை. இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்ரேயஸ் ஐயர் தற்போது நன்றாக உணர்கிறார். ஆனாலும் முதுகு பிடிப்பில் இருந்து அவர், முற்றிலும் குணமடையவில்லை. பிசிசிஐ மருத்துவக்குழு அவரைஓய்வில் இருக்க அறிவுறுத்தி உள்ளது. இதனால் ஸ்ரேயஸ் ஐயர் இந்திய அணியினருடன் மைதானத்துக்குபயணம் செய்யவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 5-ம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்க உள்ள நிலையில் ஸ்ரேயஸ் ஐயரின் உடற்தகுதி பல்வேறு கேள்வி களை எழுப்பி உள்ளது.