துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர், லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 ரன்களும், நேபாளம் அணிக்கு எதிராக 67 ரன்களும் சேர்த்திருந்தார். தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ள ஷுப்மன் 750 ரேட்டிங் புள்ளிகளுடன் உள்ளார். 2-வது இடம் வகிக்கும் தென் ஆப்பிரிக்காவின் வான் டெர் டஸ்ஸனுக்கும் (777) ஷுப்மன் கில்லுக்கும் 27 புள்ளிகளே வித்தியாசம் உள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 82 ரன்கள் விளாசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் 12 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தை அடைந்துள்ளார். நேபாளம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 131 பந்துகளில் 151 ரன்கள் விளாசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் 882 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். மற்றொரு பாகிஸ்தான் பேட்ஸ்மேனான இமாம் உல் ஹக் 732 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், அயர்லாந்தின் ஹாரி டெக்டர் 726 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (726), பாகிஸ்தானின் பஹர் ஸமான் (721), தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக் (718), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (702) ஆகியோர் முறையே 6 முதல் 9-வது இடங்களில் உள்ளனர். இந்தியாவின் விராட் கோலி 695 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் தொடர்கிறார்.
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் ஷாகீன் ஷா அப்ரிடி 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர், 4 விக்கெட்களை வீழ்த்தியதால் தரவரிசையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹரிஸ் ரவூஃப் 14 இடங்கள் முன்னேற்றம் கண்டு 29-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் மொகமது சிராஜ் 652 ரேட்டிங் புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 614 ரேட்டிங் புள்ளிகளுடன் 12-வது இடத்திலும், ஜஸ்பிரீத் பும்ரா 35-வது இடத்திலும் உள்ளனர்.
வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன் இரு இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கையின் தீக் ஷனா 5 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் 705 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார். மிட்செல் ஸ்டார்க் 2-வது இடத்திலும் நியூஸிலாந்தின் மேட் ஹென்றி 3-வது இடத்திலும் தொடர்கின்றனர். -பிடிஐ