இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு போதும் லாபநோக்கத்திற்காக நடத்தப்படுவதில்லை, வீரர்களுக்கும், கிரிக்கெட் வளர்ச்சிக்குமே அனைத்து வருவாயும் செலவிடப்பட்டு வருகிறது என்று ஐசிசி தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று அவருக்கு எம்.எம்.ஏ. மற்றும் எம்.சி.சி.ஐ, கிளப்கள் பாராட்டு விழா நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
”பிசிசிஐ எப்போதும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பிசிசிஐ கிரிக்கெட்டிற்கு என்ன செய்துள்ளது என்பதை பெரும்பாலானோர் அறியவில்லை.
2004ஆம் ஆண்டு முதல் அதிக வருவாயை உருவாக்கினோம், இதனால் மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு வருவாய் உத்தரவாதமாக வரத் தொடங்கியது. ஸ்பான்சர்கள் மற்றும் ஊடக உரிமைகள் மூலம் வரும் வருவாயை 25 மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கும் பகிர்தளிக்கப்பட்டு வருகிறது.
பிசிசிஐ ஏதோ பணத்தால் கொழித்து வருகிறது என்ற பேச்சு இருந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல, பிசிசிஐ நிச்சயம் லாப நோக்க நிறுவனம் அல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். வருவாயில் 26% வீரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
முன்பெல்லாம் ரஞ்சி டிராபி விளையாடும் வீரர்கள் நாளொன்றுக்கு சில நூறு ரூபாய்களே சம்பாதித்தனர். ஆனால் இன்று நாளொன்றுக்கு ரூ.35,000 ரூபாய் வரையிலும் பெறுகிறார். கிரிக்கெட்டை ஒரு கரியராகத் தேர்வு செய்யும் அளவுக்கு இன்று பிசிசிஐ வளர்ந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.
வருவாய் பெருக்கத்தினால் வரும் பணம் விளையாட்டு மைதானங்களை உருவாக்க, உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னெப்போதும் விட இப்போது இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு வசதிகள் அதிகம்”
இவ்வாறு கூறினார் சீனிவாசன்.