புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் மாரத்தான் போட்டியில் (42 கிலோ மீட்டர்) உகாண்டா வீரர் விக்டர் கிப்லான்கட் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது. ஆடவர் மாரத்தான் போட்டியில் உகாண்டா வீரர் விக்டர் கிப்லான்கட், பந்தய தூரத்தை 2 மணி நேரம் 8 நிமிடங்கள் 53 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இவர் 2022-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டி மாரத்தானிலும் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த வீரர் மாரு டெஃபேரி 2 மணி நேரம் 9 மணி நிமிடங்கள் 12 விநாடிகளில் பந்தய தூரத்தை எட்டி 2-வது இடம் பிடித்தார். அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. எத்தியோப்பியாவைச் சேர்ந்த வீரர் லியுல் கெப்ரேசிலாஸ் 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலத்தைக் கைப்பற்றினார். அவர் பந்தய தூரத்தை 2 மணி நேரம் 9 நிமிடங்கள் 19 விநாடிகளில் கடந்தார்.
தங்கப் பதக்கம் வென்றது குறித்து விக்டர் கிப்லான்கட் கூறியதாவது: மாரத்தான் பந்தயம் மிகக் கடினமானது என்பது அனைவருக்குமே தெரியும். இந்தப் போட்டியின்போது 30-வது கிலோ மீட்டரைத் தாண்டும்போது நான் வெற்றி பெறுவேன் என்று நினைத்தேன். எத்தியோப்பிய வீரர்கள் லியுல் கெப்ரேசிலாஸ், டாமிராட் டோலா ஆகியோர் சவால் அளித்தனர். இருந்தபோதும் அதிக மனோதிடத்துடன் பந்தய தூரத்தைக் கடந்தேன். இவ்வாறு அவர் கூறினார். உலக தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் மாரத்தான் போட்டியில் நடப்புச் சாம்பியனான டாமிராட் டோலா (எத்தியோப்பியா), 39-வது கிலோமீட்டர் தூரத்திலேயே பந்தயத்திலிருந்து விலகிக் கொண்டார்.