விளையாட்டு

4-ஆம் நிலையில் இறங்க துல்லிய வீரர் விராட் கோலிதான்! - ஏ.பி.டிவில்லியர்ஸ் ‘சர்டிபிகேட்’

ஆர்.முத்துக்குமார்

2019 உலகக்கோப்பை முதல் இந்திய பேட்டிங் வரிசையின் 4-ஆம் நிலை பேட்டருக்கான தேடல் முடிந்தபாடில்லை. விராட் கோலியையே அந்த இடத்தில் களமிறக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த ஊதுகுழலில் இணைந்துள்ளார் கோலியின் ஆர்சிபி சகா டிவில்லியர்ஸ்.

யார் யாரையோ முயற்சி செய்து பார்த்தார்கள்.விராட் கோலியே அவரது கேப்டன்சியில் சில முயற்சிகளைச் செய்து பார்த்தார். ஆனால், 4-ம் நிலை வீரர் சிக்கவில்லை. விராட் கோலி 3-ம் நிலையில் இறங்குகிறார். மேலும் உலகின் சிறந்த பேட்டர்கள் எல்லோரும் 3-ம் நிலையில்தான் இறங்கி வெற்றி கண்டவர்கள். விவ் ரிச்சர்ட்ஸ் முதல் ரிக்கி பாண்டிங், விராட் கோலி வரை அனைவரும் 3-ம் நிலைதான். எனவே விராட் கோலியைக் கொண்டு போய் அந்த நிலையில் இறக்குவது சச்சின் டெண்டுல்கரைக் கொண்டு போய் 2007 உலகக்கோப்பையில் ராகுல் திராவிட்- கிரெக் சாப்பல் கூட்டணி 4-ம் நிலையில் இறக்கி இந்தியா வெளியேறியதே அது போல் நடந்து விடும் என்றும் பலர் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் இவ்வாறு ‘ரெக்கமண்ட்’ செய்கிறார்: “நாம் இன்னமும் இந்திய பேட்டிங் வரிசையில் நம்பர் 4-ல் ஆடப்போகும் வீரர் யார் என்று பேசிக்கொண்டே இருக்கிறோம். விராட் (கோலி) அந்த இடத்தை நிரப்புவார் என்று வதந்திகள் எழுந்து வருவதை நானும் கேள்விப்படுகிறேன். நான் இதை பெரிதும் ஆதரிக்கிறேன். ஏனெனில் விராட் கோலிதான் துல்லியமான நம்பர் 4 வீரர். அவர்தான் மிகப்பொருத்தமுடையவர்.

அவர் மட்டுமே இன்னிங்ஸை ஒருங்கிணைத்துக் கடைசி வரை கொண்டு செல்ல முடியும். மிடில் ஆர்டரில் எந்த வித ஆட்டத்தையும் அவரால் மட்டுமே ஆட முடியும். ஆனால் அவருக்கு இந்த ரோல் பிடிக்குமா என்று எனக்குத் தெரியாது. அவர் தனது 3-ம் நிலையை மிகவும் விரும்புவார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும் அவருக்கும் தெரியும். ஏனெனில் அந்த நிலையில்தான் அவர் அத்தனை ரன்களையும் விளாசியுள்ளார். ஆனால் கடைசியில் அணியின் தேவை என்னவோ அதைப் பூர்த்தி செய்வதைத் தவிர வேறு வழியில்லை. கையைக் கட்டிக் கொண்டு அந்த ரோலைச் செய்ய வேண்டியதுதான்” என்கிறார்.

இந்த நிலையில், விராட் கோலியின் ஸ்கோர் புள்ளி விவரங்களும் சாதகமாக உள்ளன. கோலியின் 46 ஒருநாள் சதங்களில் 7 சதங்கள் 4-ம் நிலையில் இறங்கி அவர் எடுத்ததே. இந்த டவுனில் 39 இன்னிங்ஸில் கோலி 12767 ரன்களை 55.21 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட்டும் கூட 90.66 என்று ஆரோக்கியமாகவே இருக்கிறது.

கேப்டன் ரோஹித் சர்மாவும் கடைசியாக அளித்த பேட்டியில் கூறிய போது, “எந்த வீரரும் நான் அந்த நிலையில் சிறப்பாக ஆடுகிறேன். மாற்றினால் சிக்கல் என்று கூறக்கூடாது. எந்த நிலையிலும் இறங்கி ஆடும் வீரர்களைத்தான் எதிர்பார்க்கிறோம். இந்தச் செய்தியை திட்டவட்டமாக எல்லா வீரர்களிடத்திலும் தெரிவித்திருக்கிறோம். இது இப்போது இல்லை கடந்த 3-4 ஆண்டுகளாகவே இதைக் கடைப்பிடிக்கவே வலியுறுத்தி வருகிறோம்” என்கிறார்.

ஆகவே, விராட் கோலி 4-ம் நிலையில் இறங்குவார் என்றே இப்போதைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னோட்டம் ஆசியக் கோப்பையிலேயே பார்க்கப்படும் என்றும் கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT