விளையாட்டு

சீனாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கு 634 வீரர்களை அனுப்புகிறது இந்தியா

செய்திப்பிரிவு

சீனாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கு 634 வீரர், வீராங்கனைகளை அனுப்புகிறது இந்தியா.

சீனாவின் ஹாங்சோ நகரில் வரும் செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிய விளையாட்டு போட்டி தொடங்குகிறது. இதில் இந்தியாவில் இருந்து கலந்துகொள்வதற்கு 850 வீரர், வீராங்கனைகளை இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில் இந்த பட்டியலில் 634 வீரர், வீராங்கனைகளுக்கு நேற்று அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்.

38 விளையாட்டுகளில் பங்கேற்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிராக் மற்றும் பீல்டு (தடகளத்தில்) பிரிவில் 65 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 34 வீரர்களும், 31 வீராங்கனைகளும் அடங்குவர். கால்பந்து போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் என மொத்தம் 44 பேர் கலந்துகொள்கின்றனர். இதேபோன்று ஹாக்கியில் இருபிரிவிலும் சேர்த்து 36 பேர் பங்கேற்கின்றனர். கிரிக்கெட்டில் ஆடவர் அணியில் 15 பேரும், மகளிர் அணியில் 15 பேரும் இடம் பெற உள்ளனர்.

துப்பாக்கி சுடுதலில் 30 பேர் கொண்ட குழுவும், படகு போட்டியில் 33 பேர் கொண்ட குழுவும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆடவருக்கான பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ரக்பி போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. தற்காப்பு கலை, மகளிர் பளுதூக்குதலில் இரு வீராங்கனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜிம்னாஸ்டிக்ஸிலும் ஒருவர் இடம் பெற்றுள்ளார்.

ஆடவருக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப் பிரிவில் பஜ்ரங் பூனியா பெயர் இடம் பெற்றுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற தேர்வு போட்டியில் பஜ்ரங் பூனியா கலந்துகொள்வதில் இருந்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்காலக்குழு விலக்கு வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் 65 கிலோ எடைப் பிரிவில் விஷால் காளிராமன் முதலிடம் பிடித்து, ஆசிய விளையாட்டு போட்டிக்கான பட்டியலில் தனது பெயரை சேர்க்க மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையே பஜ்ரங் பூனியா, ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அவர், விலகினால் விஷால் காளிராமன் சேர்க்கப்படக்கூடும். மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத் காயம் காரணமாக விலகியதை தொடர்ந்து அன்டிம் பங்காலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT