விளையாட்டு

மனவலிமையில் பிரக்ஞானந்தா ‘அசுரன்’ - மேக்னஸ் கார்ல்சன் பாராட்டு

செய்திப்பிரிவு

பாகு: மன வலிமையில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா அரசுன் என்றும் கிளாசிக் போட்டியில் மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் வலிமையாக திகழ்வதாகவும் பாராட்டி உள்ளார் உலகக் கோப்பை செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றமுதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன்.

அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவை டைபிரேக்கர் சுற்றில் 1.5-0.5 என்ற கணக்கில் வென்று முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன். உலக செஸ் அரங்கில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தரவரிசையில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் கார்ல்சன், ஏற்கெனவே 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

உலக செஸ்ஸில் பல்வேறு பட்டங்களை அவர், கைப்பற்றிய போதிலும் உலகக் கோப்பை தொடர் மட்டுமே அவரது மகுடத்தை அலங்கரிக்காமல் இருந்தது. தற்போது அந்த கோப்பையையும் வென்று செஸ்வாழ்க்கையின் பயணத்தை முழுமை பெறச் செய்துள்ளார் கார்ல்சன். உலகக் கோப்பையை வென்ற கார்ல்சன், இந்திய கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, டி.குகேஷ் ஆகியோரை வெகுவாக பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர், கூறியதாவது:

உலகக் கோப்பை தொடரில் உக்ரைனின் வாசில்இவான்சுக் மற்றும் 3 இளம் வீரர்களுடன் விளையாடினேன். இவர்கள் உண்மையிலேயே வலுவான வீரர்கள்.குகேஷுக்கு எதிரான ஆட்டத்தை சிறப்பானதாக உணர்ந்தேன். இல்லையெனில், போட்டி மிகவும் கடினமாக இருந்திருக்கும். மற்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மிகவும் வலிமையானவர்கள். ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் என்னை மிகவும் கடினமான நிலைக்கு தள்ளினார், அவர் என்னை வெளியேற்றுவதற்கு ஒரு நகர்வில் இருந்தார்.

குகேஷ் தற்போது மிகவும் வலுவான கிளாசிக்கல் வீரராக திகழ்கிறார். பிரக்ஞானந்தா, நோடிர்பெக் அப்துசட்டோரோவ் (உஸ்பெகிஸ்தான்) ஆகியோரும் வலுவானவர்கள். ஆனால் இவர்கள் இருவரும் மனவலிமையில் அரக்கர்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக சற்று கீழே ஒரு அடுக்கில் வின்சென்ட்டும் மற்றம் சிலரும் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் நான் நினைப்பது என்னவென்றால், சதுரங்கம் எதிர்காலத்தில் நல்ல கைகளில் இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

1990-1994-ல் பிறந்த வீரர்களின் தலைமுறை உண்மையில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்துகிறது. இப்போது, 2003-ல் பிறந்த இந்த இளைஞர்களால், எங்களுக்குப் பிறகு எங்களுக்குத் தகுதியான ஒரு தலைமுறை உள்ளது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. இவ்வாறு மேக்னஸ் கார்ல்சன் கூறினார்.

SCROLL FOR NEXT