டிரெண்டு பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாளான நேற்று இந்தியா 346/9 என்ற நிலையிலிருந்து 457 ரன்கள் எடுத்தது.
கடைசி விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த புவனேஷ் குமார், மொகமது ஷமி ஆகியோர் இங்கிலாந்து பவுலர்களை வெறுப்பேற்றினர். இருவரும் இணைந்து 111 ரன்களைச் சேர்த்ததோட் இருவருமே அரைசதம் எடுத்தனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்தியாவின் 2வது சிறந்த கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப் ஆகும் இது.
கடைசி விக்கெட்டுக்காக ரன்கள் சேர்த்த ஜோடிகள்:
டாக்காவில் சச்சின் டெண்டுல்கர், ஜாகீர் கான் இணைந்து 2004ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசி விக்கெட்டுக்காக 133 ரன்களைச் சேர்த்ததே இந்தியாவை பொறுத்தவரை கடைசி விக்கெட்டுக்காகச் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.
2010ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் இணைந்து 105 ரன்களைக் கடைசி விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். இது ஒரு முக்கியமான ஆட்டமாகும்.
மொகமது ஷமி, ரோகித் சர்மா இணைந்து 2013ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மும்பையில் 80 ரன்களைக் கடைசி விக்கெட்டுக்காகச் சேர்த்துள்ளனர்.
1985ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி கடுமையான நடுவர் மோசடிகளுக்கு இடையே வெற்றி வாய்ப்புகளைக் கோட்டைவிட்டு வந்தது. அந்தத் தொடரில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் சுனில் கவாஸ்கர், ஆஃப் ஸ்பின்னர் ஷிவ்லால் யாதவ் இணைந்து கடைசி விக்கெட்டுக்காக 94 ரன்கள் சேர்த்தனர்.
2007ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அனில் கும்பிளே, ஸ்ரீசாந்த் இணைந்து 73 ரன்கள் சேர்த்தனர்.
புவனேஷ் குமார்-மொகமது ஷமி சேர்த்த ரன்கள் இரண்டாம் இடத்தில் உள்ளது.
2012ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து பவுலிங் 3வது முறையாக கடைசி விக்கெட் பேட்ஸ்மென்களை 100 ரன்களுக்கு மேல் அடிக்கவிட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஆகர் மற்றும் பிலிப் ஹியூஸ் கடைசி விக்கெட்டுக்காக 163 ரன்கள் சேர்த்தனர். ஆகரின் முதல் டெஸ்ட் அது, சதத்தை 1 ரன்னில் கோட்டை விட்டதாக ஞாபகம்.
2012ஆம் ஆண்டு டினோ பெஸ்ட், தினேஷ் ராம்தின் இணைந்து இங்கிலாந்துக்கு எதிராக கடைசி விக்கெட்டுக்காக 143 ரன்களைச் சேர்த்தனர்.