கோப்புப்படம் 
விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப் | நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் இறுதிக்கு தகுதி!

செய்திப்பிரிவு

புடாபெஸ்ட்: நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 19-ம் தேதி தொடங்கியது. வரும் 27-ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது. இதில் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின், முரளி ஸ்ரீசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜெஸ்வின் ஆல்ட்ரினின் சிறப்பான செயல் திறன் 8.42 மீட்டராகவும், முரளி ஸ்ரீசங்கரின் செயல் திறன் 8.41 மீட்டராகவும் உள்ளது. இதனால் இவர்கள் பதக்கம் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. இன்று நீளம் தாண்டுதலில் ஆடவருக்கான தகுதி சுற்று நடைபெற்றது. இதில் குரூப் ஏ-வில் இடம்பெற்றிருந்த முரளி ஸ்ரீசங்கர், முறையே 7.74 மீ, 7.66 மீ மற்றும் 6.70 மீ என நீளம் தாண்டி, குரூப் பிரிவில் 12-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். ஒட்டுமொத்தமாக அவர் 22-வது இடம் பிடித்தார்.

குரூப்-பி பிரிவில் விளையாடிய ஜெஸ்வின் ஆல்ட்ரின், தனது முதல் வாய்ப்பில் 8.0 மீட்டர் நீளம் தாண்டி இருந்தார். அதே நேரத்தில் அடுத்த இரண்டு வாய்ப்புகள் ஃபவுலாக அமைந்தது. குரூப் பிரிவில் 6-வது இடமும், ஒட்டுமொத்தமாக 12-வது இடமும் பிடித்து நீளம் தாண்டுதல் இறுதி சுற்றில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். நாளை இறுதி சுற்று நடைபெறுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தகுதி சுற்றோடு அவர் வெளியேறினார்.

SCROLL FOR NEXT